மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு தேவையா? என்று தேசியவாத காங். மூத்த தலைவர் அஜித் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா அரசின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத மூத்த தலைவருமான அஜித் பவார் பேசுகையில், ‘சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்துள்ள 30 முதல் 35 எம்எல்ஏக்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பால் அரசுக்கு மாதம் ரூ.20 லட்சம் (தலா ஒரு எம்எல்ஏவுக்கு) செலவாகிறது. இவர்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் ஏன்? ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, யாருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
எம்எல்ஏ பாஸ்கர் ஜாதவின் வீட்டிற்கு வெளியே குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் அவருக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது பதவியில் இருக்கும் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு ஆதாரங்களை சபையில் கொடுத்தோம். ஆனால் அவர்களை அரசு காப்பாற்றுகிறது’ என்றார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாலாசாகேப் தோரத், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோல், காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிதின் ராவத் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், தற்போது அந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.