பட மூலாதாரம், Mohanlal
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக் குழு அறிவித்திருக்கிறது.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் எல்2: எம்புரான். இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒரு தரப்பினரின் மனதைப் புண்படுத்துவதாக இருப்பதால், அதனை நீக்கப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இதன் பின்னணி என்ன? படத்தில் என்ன சர்ச்சை?
எம்புரான் படத்தின் பின்னணி என்ன?
2019ல் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து லூசிஃபர் என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் மோகன்லால் தவிர, பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதன் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு ஜூன் 19ல் வெளியானது.
எல்2: எம்புரான் என்ற இந்தப் படத்தை 2020லேயே வெளியிட முடிவு செய்திருந்தாலும் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் தயாரிப்பு தள்ளிச் சென்றது. இதற்குப் பிறகு 2023 அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கி, 2024 டிசம்பரில் முடிவுக்கு வந்தது.
படப்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.
லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும், லூசிஃபர் படத்தை பார்க்காமலேயே தனியாகவும் பார்க்கக்கூடிய வகையில்தான் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Mohanlal
லூசிஃபர் மற்றும் எல்2: எம்புரான் படத்தின் கதை என்ன?
லூசிஃபர் படத்தின் கதை இதுதான்: கேரள மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஐ.யு.எஃப்பின் தலைவர், பி.கே. ராமதாஸ் காலமாகிறார்.
அவருக்கு ஒரு மகனும் (டொவினோ தாமஸ்) மகளும் (மஞ்சு வாரியர்) இருக்கிறார்கள். பி.கே. ராமதாஸுக்கு (சச்சின் கேடேகர்) ஸ்டீஃபன் நெடும்பள்ளி (மோகன்லால்) மீதும் பெரும் பாசம் இருக்கிறது. இந்த நிலையில், மஞ்சு வாரியரின் கணவர் விவேக் ஓபராய், போதைப் பொருள் கும்பலோடு சேர்ந்து, கேரளாவில் போதைப் பொருட்களை சப்ளை செய்கிறார். இந்த நிலையில், டொவினோ தாமஸை முதல்வர் பதவியில் அமரவைக்கிறார் மோகன்லால். விவேக் ஓபராயைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிறார் என்பதோடு முதல் பாகம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாகமான எல்2: எம்புரானில் முதல்வராக இருக்கும் டொவினோ தாமஸ், பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி விசாரணைக்கு ஆளாகிறார். இதனால், ஐ.யு.எஃபை உடைத்து ஐ.யு.எஃப் (பிகேஆர்) என்ற புதிய கட்சியை உருவாக்குகிறார். அகண்ட சக்தி மோர்ச்சா என்ற ஒரு தேசியக் கட்சியோடு இணைகிறார். அந்தக் கட்சியின் தலைவர் பால்ராஜ் என்ற பாபா பஜ்ரங்கி. பல ஆண்டுகளுக்கு முன்பாக மதக் கலவரத்தில் ஈடுபட்டு பலரைக் கொலைசெய்தவர்.
இதற்கிடையில் இந்திரஜித் சுகுமாரன், மோகன்லாலைக் கண்டுபிடித்து கேரளாவின் நிலைமையைச் சொல்கிறார். திரும்பிவரும் மோகன்லால், ஐயுஎஃபின் தலைவராக மஞ்சு வாரியாரை நிறுத்தி, அவரை முதல்வராக்க முயல்கிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
பட மூலாதாரம், Mohanlal
வலதுசாரி அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்ப்பது ஏன்?
படத்தின் துவக்கத்தில் வரும் 15 நிமிட கலவரக் காட்சிகளில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதாக காட்டப்படுகிறது.
இது 2002 கோத்ரா கலவரத்தைச் சுட்டிக்காட்டுவதாக வலதுசாரிகள் விமர்சிக்கின்றனர். மேலும் சில காட்சிகள், பில்கிஸ் பானு வழக்கை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தன.
படத்தில் வில்லனின் பெயர் பாபா பஜ்ரங்கி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயர் நரோடா படியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை வெற்ற பாபு பஜ்ரங்கியின் பெயருக்கு நெருக்கமாக இருந்ததையும் பலர் சுட்டிக்காட்டினர்.
ஆர்எஸ்எஸ்-ன் இதழான ஆர்கனைஸர் இந்தப் படத்தைக் கடுமையாக விமர்சித்தது. “தேச விரோத, இந்து விரோத கருத்துகளைத் திணிக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை” என ஆர்கனைஸர் குறிப்பிட்டது.
பா.ஜ.கவின் கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முதலில் எம்புரான் படத்திற்கும் படத்தின் இயக்குநர் பிருத்விராஜ், மோகன்லால் ஆகியோருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், வரும் நாட்களில் அந்தப் படத்தைப் பார்க்கப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்தார். ஆனால், படம் வெளியானதும் அவரது கருத்துக்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதையடுத்து தன்னுடைய முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கி, அந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
படத்திற்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், Mohanlal
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் கேரள மாநிலச் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேறி, இந்தப் படத்திற்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டார்.
இதற்குப் பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன், எம்புரான் படத்திற்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்தார். “எம்புரான் படத்திற்கும் அதன் படைப்பாளிகளுக்கும் எதிராக செய்யப்படும் வகுப்புவாத பிரசாரம் கவலையளிக்கிறது. எதிர்க் குரல்களை அச்சுறுத்தல்கள் மூலம் ஒடுக்கும் செயல்பாடுகளுக்கு இது ஒரு உதாரணம். அச்சுறுத்தல் மூலமும் பயத்தின் மூலமும் படைப்புச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஜனநாயகத்தின் அடிப்படையையே தாக்குவது. கருத்துச் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை. இதைக் காக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்” என தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியும் படத்திற்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தது.
படத்தின் நாயகன் மோகன்லால் பின்வாங்கியது ஏன்?
இந்தப் படம் வெளியானதும் வர்த்தக ரீதியாக இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தபோதும் இந்தப் படம் தொடர்பாக வலதுசாரி அமைப்புகளும் தனிநபர்களும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்ததும் இந்தத் திரைப்படம் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.
“லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல், சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன்.
ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் ‘எம்புரான்’ குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம்.
இதுபோன்ற சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம். கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். இதைத் தவிர, மோகன்லால் என்பது வேறு அல்ல என உறுதியாக நம்புகிறேன்.” என தனது சமூக வலைதள பதிவில் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தப் படத்தை மீண்டும் தணிக்கை செய்த இந்திய தணிக்கை வாரியம், படத்தில் 17 காட்சிகளை நீக்கச் சொல்லியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இந்த மாற்றங்களுடன் படம் தணிக்கை வாரியத்திற்கு திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்த பிறகு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட வடிவில் எல்லா இடங்களிலும் படம் வெளியாகும் என அந்தச் செய்தி கூறியது.
ஆனால், தற்போது மூன்று நிமிடக் காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Mohanlal
வர்த்தக ரீதியில் இந்தப் படத்திற்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?
எம்புரான் திரைப்படம், மலையாளம் தவிர, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது.
மலையாள மொழியில் படம் பார்ப்போர் ஐமேக்ஸ் வடிவிலும் இந்தப் படத்தை பார்க்க முடியும். முதல் நாளில் மட்டும் கேரளாவில் 746 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படம் வெளியாகி, மூன்று நாட்களுக்குள்ளேயே சுமார் 100 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தப் படத்தின் மூன்றாவது பாகம், L3: The Beginning என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு