பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.
பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், “இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். இது இந்தியாவிற்கு எப்-35 போர் விமானங்களை வழங்குவதற்கும் வழி வகுக்கும்” என்றார்.
எப்-35 போர் விமானம் என்றால் என்ன என்பதையும், அது ஏன் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாகவும், மிகவும் விலையுயர்ந்த போர் விமானமாகவும் கருதப்படுகிறது? அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?
எப்-35 போர் விமானத்தின் தனிச் சிறப்புகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். (அதாவது ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறிவதைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ விமானமாகும்).
மேலும் அதன் சூப்பர்சோனிக் வேகத்திற்கு பெயர் பெற்றது இவ்விமானம்.
தொலைதூர இலக்குகளைத் தாக்குவதில் வெற்றியடைவதன் காரணமாக இது நவீன போர்க்களத்தில் சிறந்த விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன வலைத்தளத்தின்படி, லாக்ஹீட் மார்ட்டின் எப்-35 லைட்னிங்-2, ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், ஆயுதத் திறன் மற்றும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில், மிகவும் ஆபத்தான போர் விமானம் என்று அறியப்படுகின்றது.
பட மூலாதாரம், Getty Images
எப்-35 போர் விமானத்தின் வகைகள்
இந்த விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் வலைத்தளத்தின்படி, இந்த போர் விமானத்தில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.
இந்த நிறுவனம் தனது விமானத்தை அமெரிக்க விமானப்படை, மரைன் கார்ப்ஸ் மற்றும் கடற்படை மற்றும் இஸ்ரேல், பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா மற்றும் நார்வே உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விற்றுள்ளது.
அதனையடுத்து, இந்நாடுகளின் விமானப் படைகள் இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. விரைவில் இந்தியாவும் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம்.
எப்-35ஏ: இந்த விமானங்கள் நிலையான ஓடுபாதைகளில் இருந்து எளிதாகப் புறப்படும். அமெரிக்க விமானப்படை இந்த விமானங்களை அதிகம் பயன்படுத்துகிறது.
எப்-35பி: இந்த விமானங்கள் ஹெலிகாப்டர் போல நேரடியாக தரையிறங்கும் திறன் கொண்டவை. இதன் காரணமாக இந்த விமானத்தால் ஒரு சிறிய இடத்தில் கூட தரையிறங்க முடியும்.
இந்த திறனின் காரணமாக, இது போர்க்கப்பல்களிலும் தரையிறங்க உதவுகிறது.
அமெரிக்க மரைன் கார்ப்ஸ், இத்தாலிய விமானப்படை மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகியவை இந்த விமானங்களைப் பயன்படுத்துகின்றன.
பட மூலாதாரம், Getty Images
எப்-35சி: இந்த வகையில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் அமெரிக்க கடற்படையின் முதல் ஸ்டெல்த் போர் விமானம் மற்றும் உலகின் ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும். அவை விமானம் தாங்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் 25 மிமீ பீரங்கி, வான்வழி ஏவுகணைகள் மற்றும் 907 கிலோ வழிகாட்டப்பட்ட குண்டுகளை (குறிப்பிட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் குண்டுகள்) சுமந்து செல்லும் திறன் கொண்டது.
எப்-35 விமானத்தால் 1.6 Mach அல்லது 1975.68 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும், ஏனெனில் அதன் இயந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அது மட்டுமின்றி, ஆயுதங்கள் மற்றும் எரிபொருளுடன் முழுமையாக ஏற்றப்பட்டாலும், எப்-35 விமானத்தால் இந்த வேகத்தை அடைய முடியும்.
இந்த போர் விமானம் ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிகல் டார்கெட்டிங் சிஸ்டம் (ஈஓடிஎஸ்) மற்றும் ஹெல்மெட்-மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம் (எச்எம்டிஎஸ்) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
அதன் மின்னணு போர் அமைப்பால், எதிரிகளின் இருப்பிடங்களைக் கண்டறியவோ அல்லது கண்காணிக்கவோ மட்டுமல்லாமல், ரேடார்களையும் முடக்கி தாக்குதல்களைத் தடுக்கவும் முடியும்.
பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்பு நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள்
அமெரிக்க அரசாங்க பொறுப்புடைமை அலுவலகம் (GAO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்கா இதுவரை 2,700 எப்-35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அவற்றில் 900 விமானங்களை ஏற்கனவே பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்த போர் விமானத்தின் விலை அமெரிக்காவிற்கு 82.5 மில்லியன் டாலர் ஆகும், அதாவது தோராயமாக 7.16 பில்லியன் இந்திய ரூபாய். கூடுதலாக, ஒரு மணி நேரத்திற்கு விமானச் செலவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 34 லட்சத்துக்கும் அதிகம்.
அமெரிக்கா இந்த விமானங்களை இந்தியாவுக்கு எவ்வளவு விலைக்கு விற்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த விமானங்கள் தற்போது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானங்களாக கருதப்படுகின்றன என்பதும் தெளிவாகிறது.
மேலும் அமெரிக்க அரசாங்க பொறுப்புடைமை அலுவலக (GAO) அறிக்கையின்படி, அதன் விலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விமானத்தின் ஆயுட்காலம் 66 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எப்-35 இன் விலை அதிகரித்து வருவதற்கு, அதன் பராமரிப்புக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு, உற்பத்தி செலவுகள் மற்றும் தயாரிப்புக்கு தேவைப்படும் நேரம் ஆகியவை காரணமாகும்.
இதன் காரணமாக பாதுகாப்பு நிபுணர்கள் கூட இது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மறுபுறம், 2022ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட எப்-35 போர் விமானங்களின் ஒரு தொகுதியில், பைலட் வெளியேற்ற அமைப்புகளில் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக இதே அமெரிக்க விமானங்களை, தற்போது அமெரிக்க அரசாங்கத்தோடு தொடர்புடைய தொழிலதிபர் ஈலோன் மஸ்க் ‘குப்பை’ என்று விவரித்துள்ளார். மேலும், இந்த விமானத்தை உருவாக்கியவர்களை ‘முட்டாள்கள்’ என்றும் அவர் அழைத்தார்.
சில காலமாக, இந்த போர் விமானத்தின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு