சந்தேகம், கோபம், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு தராதது, சரி… தவற்றை உணர்ந்து நடக்காதது… உறவுமுறை பிரச்னைகளுக்கு இதுபோன்று பல காரணங்கள் இருக்கின்றன. இதில், ‘கேஸ்லைட்டிங் (Gaslighting)’ எனும் சிக்கல், பல உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
`தன்மீதுதான் தவறோ…?’ என்று பாதிக்கப்பட்டவரையே குற்றவுணர்வுக்குத் தள்ளும் நிலைதான் `கேஸ்லைட்டிங்’ சிக்கல்.

இணையம் வாயிலாக 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உறவுமுறை சார்ந்த வார்த்தைகளில் ஒன்றாக `கேஸ்லைட்டிங்’ கவனம் பெற்றிருப்பதாக, அமெரிக்க இணையதள நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நம் வாழ்க்கையிலும் உறவுமுறைகளிலும் ‘கேஸ்லைட்டிங்’ எவ்வாறு நுழைகிறது, இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம்.
கேஸ்லைட்டிங் என்றால் என்ன?
“தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, `நம்ம மேலதான் தப்போ?’ என்று அவரை நம்ப வைக்கும் நிலைதான் இது. கணவன் – மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், நண்பர்களுக்குள், அலுவலகத்தில் என எல்லா உறவுமுறையிலும் இந்தச் சிக்கல் வரலாம். கணவன் மனைவியில் ஒருவர் இன்னொருவரை கேஸ்லைட்டிங் செய்யலாம்.
அதற்கான காரணம், அவரவர் நிலைப்பாடு மற்றும் சூழலைப் பொறுத்தது. உதாரணத்துக்கு, கணவன் – மனைவிக்குள் தவறு செய்த ஒருவர், தன் பேச்சு மற்றும் செய்கையால், `என்னாலதான் இந்தத் தப்பு நடந்துச்சு’ என்று பாதிக்கப்பட்டவரையே நம்ப வைக்கும் நிலைதான் கேஸ் லைட்டிங்.

பாதிக்கப்பட்டவரை நம்ப வைப்பது எப்படி?
கோபத்தில் ஒருவர் இன்னொருவரைத் தாக்கி வன்முறையைக் கையில் எடுப்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். அப்படி வன்முறையைக் கையாண்டவர், `நான் தெரியாமல் அடிச்சுட்டேன்’ என்று தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோருவதுதானே நியாயம்? ஆனால், `நீ அப்படி நடந்துக்காட்டி நான் அடிச்சிருக்க மாட்டேன்ல?’, `என் பேச்சை மீறி நீ செஞ்சதாலதான் இப்படி நடந்துச்சு…’, `நீ தப்பு செஞ்சதாலதான் இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு’ என்று குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவரிடம் தன் குற்றத்தை சரியென நம்ப வைப்பார்.
இதனால், தான் செய்தது சரியா… தவறா… என்று ஆராய்ந்து முடிவெடுக்காமல், குற்றம் செய்தவர் அடித்தது அல்லது திட்டியது தவறு என்பதை மறந்து, `தப்பு என்மேலதான்…’ என்று பாதிக்கப்பட்டவர் நம்ப ஆரம்பிப்பார். மேலும், `நாம செஞ்சதுதான் தப்போ?’, `அவர் கோபம் நியாயம்தானோ?’, `அவர் எதிர்பார்ப்புபடி நடந்திருந்தா நமக்கு இந்த நிலை வந்திருக்காதில்ல?’ என்றெல்லாம் யோசித்து, பாதிக்கப்பட்டவர் குற்றவுணர்வுக்கு ஆளாவார். இந்த எண்ணத்தால், குற்றம் செய்பவரின் வன்முறைகளைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வாழப் பழகுவார்.

யாரெல்லாம் கேஸ்லைட்டிங்கை அதிகம் பயன்படுத்துவார்கள்?
சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற அகங்காரத்தில் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்.
இப்போது கவனம் பெறுவது ஏன்?
ஒரு விஷயத்தில் மனரீதியாக ஒருவர் பாதிக்கப்படுவதைத்தான் `உளவியல் சிக்கல்’ என்கிறோம். காலங்காலமாக இந்தப் பிரச்னை இருந்துவந்தபோதிலும், அறிவியல் ரீதியாக இந்தச் சிக்கலை அணுகுவதோடு, இதற்கான தீர்வையும் தேட இப்போதுதான் பலரும் அக்கறை காட்டுகின்றனர். அதனால்தான் `உளவியல் சிக்கல்’ இப்போது அதிகம் பேசப்படுகிறது. இதுபோல `கேஸ்லைட்டிங்’ சிக்கலும் காலங்காலமாக இருந்து வருவதுதான் என்றாலும், அறிவியல் ரீதியான காரணத்தையும் தீர்வையும் நோக்கி நகர்ந்திருப்பதால் தான் உலக அளவில் இந்தப் பிரச்னைக்கு கவனம் கூடியிருக்கிறது.

பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் – மனைவிக்குள் உருவாகும் `கேஸ்லைட்டிங்’ பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வருகிறது. காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்’கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் `கேஸ்லைட்டிங்’ கவனம் பெறுகிறது.
தீர்வு என்ன?
கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள். `தான் செய்ததுதான் சரி’ என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள். தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார்.

`நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துகிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே…’ என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவ ரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், `சமுதாயத்தின் கோட்பாட்டுக்கு உட்பட்டுச் சரியாகச் செயல்படும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்’ என்று, அவருக்கு யதார்த்தம் சொல்லப்படுகிறது. இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும்.
வாழ்க்கையில் இன்னொருவரைச் சார்ந்தே வாழப் பழகிய ஒருவர், `கேஸ்லைட்டிங்’ சிக்கலால் தன் கணவர் போன்ற நெருங்கிய உறவுமுறையில் இருக்கும் ஒருவரால் தொடர்ந்து வன்முறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், அவரால் சிக்கலில் இருந்து விடுபடுவது மிகவும் கடினம். எந்த உறவுமுறையாக இருந்தாலும், பிறரைச் சார்ந்து இயங்கக் கூடாது. வன்முறையை யார் கையாண்டாலும் எதிர்த்துக் கேள்வி கேட்பதுடன், அந்தச் சிக்கலிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

பெற்றோருக்குத்தான் முக்கிய பங்கு!
பெற்றோர் வளர்ப்பு முறையும், ஒவ்வொரு நிலையிலும் வளர்ந்த சூழலும் சரியாக இல்லாத பட்சத்தில்தான் `கேஸ்லைட்டிங்’ செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், `நீ ஏன் முதல் மார்க் வாங்கல’ என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம். தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம். இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி… இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை.
பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு… இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், `கேஸ்லைட்டிங்’ பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது” என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.