“என் மகன் பாதுகாப்பாக இல்லை” – சஞ்சு சாம்சன் தந்தை உருக்கம் | My son is not safe…: Sanju Samson father makes emotional appeal,

Share

கொச்சி: என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஆறு மாதங்களுக்கு முன்பே சஞ்சுவுக்கு எதிராக அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் கேசிஏ (கேரள கிரிக்கெட் சங்கம்) ஏதோ சதித்திட்டம் தீட்டியது. எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை. எங்களால் அவர்களுடன் மோத முடியாது. என் மகன் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த மாநிலமாவது என் மகனுக்கு ‘சஞ்சு, எங்களுக்காக விளையாட வா’ என்று ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், நான் அதற்கு தயாராக இருக்கிறேன்.

சஞ்சு ஒரு தனிநபர் மட்டுமே, அதேசமயம் கேசிஏ ஒரு பெரிய, சக்திவாய்ந்த அமைப்பு. என் மகனுக்கு எதிராக அவர்கள் சதி திட்டங்களை தீட்டுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் ஏன் எங்களைத் துரத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சஞ்சு தனது வாழ்க்கையில், கிரிக்கெட்டைத் தவிர வேறு எதையும் யோசித்ததில்லை. கிரிக்கெட் மைதானம் மற்றும் பயிற்சியைத் தவிர, அவர் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. அவர் தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகளை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். ஆனால் இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை இந்த சங்கத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன்” இவ்வாறு விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. இந்த தொடருக்கான கேரள அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. பயிற்சிகளில் அவர் கலந்து கொள்ளாததே காரணம் என்று கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கும் கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையிலான மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com