எடப்பாடியின் பதவி வெறிக்காக பலியாக்கப்படும் அதிமுக: உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

Share

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதனின் சுயநல பதவி வெறிக்காக அதிமுக என்ற பாரம்பரிய கட்சி பலியாக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ரஞ்சித் குமார் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதத்தில்,‘‘அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு தனிப்பட்ட முறையில் கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் உயிரிழந்த போது தற்பொழுது உள்ளது போலவே கட்சி பிளவை சந்தித்தது. ஆனால் பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் அதிமுக என்ற கட்சியின் நிர்வாகத்தை ஜெயலலிதா கையில் எடுத்தார்.

அப்போது கட்சியில் சட்ட விதிகளுக்கு எந்த பாதகமும் வந்தது கிடையாது. எதிர்காலத்தில் அதிமுகவை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதாலும், அடிப்படை உறுப்பினருக்கு தான் முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்பதாலும் தான் கடந்த 1972ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் துவக்கும் போது சட்ட விதிமுறைகளை மிகவும் திட்டவட்டமாக அமைத்தார். குறிப்பாக பொதுச்செயலாளர் போன்ற பதவியின் விதிமுறைகள் எப்பொழுதும் மாற்றி அமைக்கக் கூடாது என எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அதனை அனைத்தையும் அவசரகதியில் கட்சி சட்டத்திற்கு புறம்பாக எடப்பாடி மாற்றி அமைத்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென ஒருவர் எழுந்து நின்று மைக்கின் முன்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என சொல்லிவிட்டு, அதனை பொதுக்குழு ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கிறார். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.   இன்றைக்கு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெற்று அதிமுக உண்மை தொண்டர்களும், அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்தின்படியும் ஒற்றை தலைமையில் அமர்வேன். ஏனென்றால் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு தனி மனிதனின் சுயநலம், அதிகார ஆசை, பதவி வெறி  ஆகியவைக்காக அதிமுக என்ற பாரம்பரிய கட்சி பலியாக்கப்படுகிறது.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தமட்டில் அதிமுகவின் பொருளாளராக இருப்பவர். கட்சியின் மிக மூத்த தலைவர். கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்ட பொழுது முன்னணியில் நின்று அதனை சமாளித்தவர். ஜெயலலிதா இருந்தபோது கட்சியின் தலைமை மூன்று முறை முதல்வர் பதவியை கொடுத்த போதும் விசுவாசத்துடன் நடந்து கொண்டு தலைமையின் நம்பிக்கையை பெற்றவர். ஆனால் அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள். இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு குறிப்பிடப்படாமல் இருக்க கூடிய நிலையில் கட்சியையும் பொதுக்குழுவையும் எடப்பாடி தரப்பினர் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட வாதங்களை வைப்பதையும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் அன்று முன்வைக்கப்பட உள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com