அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..?

ஆய்வகத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து கருவாக்கி, அதை பல வருடங்கள் வரை உறைய வைப்பதும், குழந்தைப்பெற முடிவெடுத்தவுடன் அதை கருப்பையில் வைத்து வளர்த்து பிள்ளைப்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த அறிவியல்தான்.
அந்த வகையில், கடந்த 30 (1994) வருடங்களாக உறைய வைக்கப்பட்டிருந்த ஒரு கருவை, லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதி முறைப்படி தத்து எடுத்தனர். அதன்பிறகு, அந்தக்கரு லிண்ட்சே கருப்பையில் வைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி, உலகிலேயே வயதான அந்தக்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, கரு உறைய வைக்கப்பட்டதில் இருந்து கணக்கெடுத்தால் அந்தக்குழந்தைக்கு தற்போது 30 வயது.