பட மூலாதாரம், Special Arrangement
ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளருக்கு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இருப்பினும் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் தொகை எப்போது கிடைக்குமென்பது குறித்து திட்டவட்டமாகத் தெரியவில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு, தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் கிளைகள் துவக்கப்பட்டன.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம் என்று இந்த நிறுவனம் சார்பில், கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை நம்பி பல ஆயிரம் பேர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் உறுதியளிக்கப்பட்டபடி யாருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பலரும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் இந்த நிறுவனத்தின் கிளை இயங்கி வந்தது. அங்கு மட்டுமே 1,087 பேர் முதலீடு செய்து ஏமாற்றமடைந்ததாகப் புகார் அளித்திருந்தனர்.
‘ஒன்றரை லட்ச ரூபாய்க்கு 6 ஈமு கோழிக் குஞ்சுகள்’
இவர்களுடைய புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், இந்த நிறுவனம் எப்படி ஏமாற்றியது என்பது விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுசி ஈமு பண்ணை நிறுவனத்தில், ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும், அவற்றை வளர்ப்பதற்கான அடைப்பிடம் நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்படும், தீவனமும், தேவையான மருந்துகளும் கொடுக்கப்படும்.
“ஈமு கோழிகளைப் பராமரித்து வளர்ப்பதற்கு, மாதம் 6 ஆயிரம் ரூபாயும், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் தொகையும் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், முதலீடு செய்த தொகை முழுவதுமாகத் திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அதனால் ஏமாற்றமடைந்து முதலீடு செய்ததாகவும்” முதலீட்டாளர்களின் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Special Arrangement
சுசி ஈமு பண்ணை நிறுவனத்தில் முதலீடு செய்த பொள்ளாச்சி சுப்பே கவுண்டன்புதுாரைச் சேர்ந்த லோகநாதன் பிபிசி தமிழிடம் பேசினார்.
”நான் இருமுறை மூன்று லட்சமாக, மொத்தம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு இரண்டு 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தனர். ஓராண்டு கழித்து, போனஸ் தருவதாகக் கூறி, அதிலும் ஓர் ஆவணத்தை வாங்கிக் கொண்டு போனவர்கள் திருப்பித் தரவே இல்லை” என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, “போனஸ் தொகையும் வரவில்லை, ஆவணமும் திரும்பக் கிடைக்கவில்லை என்பதால், என்னிடமிருந்த ஒரு பத்திர ஆதாரத்தை வைத்தே நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றார்.
‘விவசாயிகளைக் குறி வைத்தே மோசடி’
பட மூலாதாரம், Special Arrangement
லோகநாதன் உள்பட பிபிசி தமிழிடம் பேசிய வேறு சில முதலீட்டாளர்கள் பலரும், தங்களிடம் ரொக்கமாக மட்டுமே பணம் வாங்கியதாகத் தெரிவித்தனர். ஓராண்டுக்கு பராமரிப்புத் தொகை வந்ததைத் தவிர, வேறு எந்தப் பணமும் திரும்பக் கிடைக்கவில்லை என்று கூறிய அவர்கள், ஏமாற்றமடைந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்று கூறினர்.
விவசாயிகளைக் குறி வைத்தே, கோவை நகரில் இதன் கிளையைத் துவக்காமல் பொள்ளாச்சியில் தொடங்கியிருந்ததையும் சிலர் சுட்டிக்காட்டினர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு விவசாயி, ”பணமும் திரும்பக் கிடைக்கவில்லை, அந்த ஈமு கோழிகளை எங்களால் வளர்க்கவும் முடியவில்லை. அவற்றுக்குத் தீனி போடுவதே பெரும் சிரமமாகி விட்டது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஒரு கட்டத்தில் அந்தக் கோழிகள் அனைத்தையும் கேரள வியாபாரிகளை வரவழைத்து, 500 ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கும் விற்றுவிட்டனர். பலர் பரிதாபப்பட்டு, எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று தோட்டத்திலிருந்து வெளியில் விட்டுவிட்டனர்” என்றார்.
இதேபோல கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பியே, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கவில்லை, மாதாந்திர தொகையும் வழங்கப்படவில்லை என்பதாக புகார் அளித்திருந்தனர்.
தமிழகத்தில் இதுபோன்று பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவர்களுக்காக, சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களில், தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றங்கள் (TNPID) அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வழக்கிலும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை
பட மூலாதாரம், Special Arrangement
இவற்றில் சென்னை நீதிமன்றம் தவிர்த்து, கோவை மற்றும் மதுரை டான்பிட் நீதிமன்றங்களில், சுசி ஈமு பண்ணை நிறுவனத்துக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நடந்து வருகின்றன.
இவற்றில் பொள்ளாச்சி கிளையில் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், 2012 ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில், 12 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஜனவரி 29 புதன்கிழமையன்று கோவை நீதிமன்றத்தில் முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் அளித்துள்ள இந்த உத்தரவில், சுசி ஈமு பண்ணை உரிமையாளர் குரு (வயது 45) என்கிற குருசாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கண்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ”ஈரோடு மாவட்டத்தில் பதிவான 3 வழக்குகள், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் பதிவான தலா ஒரு வழக்குகள் என மொத்தம் 6 வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தன. அவற்றில் கோவையில் பதிவான வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “ஏற்கெனவே நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பதிவான 2 வழக்குகளில் அவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கோவை தவிர்த்து, மதுரை நீதிமன்றத்தில் 4 வழக்குகள், குருசாமி மீது நடந்து வருவதாகவும் வழக்கறிஞர் கண்ணன் தெரிவித்தார். ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள குருசாமி, பிணையில் வெளியில் இருந்தபோது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
முதலீட்டுத் தொகை எப்போது திரும்பக் கிடைக்கும்?
பட மூலாதாரம், Advocate Kannan
நீதிமன்றங்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புகளின்படி, அபராதத் தொகையை அவர் எப்போது செலுத்துவார், தங்களுடைய முதலீட்டுத் தொகை எப்போது கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது.
கோவை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள புகாரின்படி, மோசடியால் ஏமாற்றமடைந்த தொகை ரூ.100 கோடியைத் தாண்டுமென்று வழக்கறிஞர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய அரசு சிறப்பு வழக்கறிஞர் கண்ணன், ”பெருந்துறையில் உள்ள சுசி ஈமு பண்ணை நிறுவனத் தலைமை அலுவலகத்தின் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதே, குருசாமியின் சொத்துகளும் அதில் இணைக்கப்பட்டன. அந்த சொத்துகள் ஏலம் விடப்பட்ட தொகையில் 30 கோடி ரூபாய், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறைப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கினார்.
அதோடு, “ஆனால் முழுத்தொகைக்கு இன்னும் சொத்துகளை எடுக்க வேண்டியிருக்கலாம். அபராதத் தொகையை குருசாமி செலுத்தினால் மட்டுமே, தீர்ப்பின்படி ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் முதலீட்டாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு