இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ள காஸா குறித்த நெதன்யாகுவின் புதிய திட்டம்

Share

உணவுக்காக தவிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

இத்தகைய நகர்வு “மிகவும் கவலையளிக்கும்” எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் ஐநா உதவி பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா ஐநா பாதுகாப்பு அவையில் கூறினார்.

நெத்தன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் காஸா பகுதியை முழுமையாக கைப்பற்றி, ஹமாஸை தோற்கடிக்கப் போகிறோம்,” என நெதன்யாகு அரசை சேர்ந்த ஒரு மூத்த நபர் கூறியதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது.

காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலின் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images

ஆனால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இத்தகைய நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

சமீபத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கலாம் அல்லது நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காஸாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது, காஸாவில் படிப்படியாக பஞ்சம் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது உரையில் ஜென்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக எச்சரித்தார்.

“இது பல மில்லியன் பாலத்தீனர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காஸாவில் மீதமுள்ள பணயக்கைதிகளின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம்,” என்று அவர் கூறினார்.

சர்வதேச சட்டத்தின் கீழ், “காஸா எதிர்கால பாலத்தீனத்தின நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது, இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேலின் ராணுவம், தற்போது காஸாவின் 75% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது.

ஆனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் உட்பட முழு பகுதியையும் ஆக்கிரமிக்க புதிய திட்டத்தை இஸ்ரேல் பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது

ராணுவத் தளபதி மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் இந்த உத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முன்மொழிவுகள் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளன .

இத்திட்டம் குறித்து ஊடகங்களில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மூத்த நபர், “இது ராணுவ தளபதிக்கு ஏற்புடையதில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்,” என்று பதிலளித்தார்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியது

இத்தகைய முடிவு தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

49 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவர்களில் 27 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் ஆகியவற்றை ஜென்கா பாதுகாப்பு அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் “அசுத்தமான” மற்றும் “மனிதாபிமானமற்ற” நிலைமைகளைக் குறிப்பிட்டு, உடனடியாக போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார்.

“இஸ்ரேல், காஸாவிற்கு உள்ளே நுழையும் மனிதாபிமான உதவிகளை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அனுமதிக்கப்படும் உதவிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை,” என்று ஜென்கா கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மே 2023 முதல் உணவு மற்றும் பொருட்களைப் பெற முயன்றபோது 1,200-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி உணவு விநியோக மையங்களில் நடைபெறும் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகளை அவர் கண்டித்தார்.

2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாகக் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது.

காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட, பரவலான பட்டினி நிலவுவதாக ஐநா முகமைகள் எச்சரித்துள்ளதுடன் இந்த மாதம் குறைந்தது 63 ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.

உதவி வழங்கப்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், காஸாவில் “பட்டினி இல்லை” என்றும் இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com