பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
இளையராஜா, 7000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டமைத்தவர், 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். இந்த எண்களைப் படிக்கும்போது, அவரது இசையமைக்கும் பாணி மற்றும் படைப்புத் திறன் குறித்த ஓர் ஆச்சரியம் எழும்.
“பாடலுக்கான சூழலும், கதையும் விவரிக்கப்படும்போது திரைப்பட இயக்குநர் மட்டுமே என்னுடன் இருப்பார். பிறகு, நானும் என் ஹார்மோனியமும் மட்டும்தான். பாடலுக்கான சூழலை கற்பனை செய்து ஹார்மோனியத்தை தொடும்போது, இசை பாயும். நான் அப்போது வேறு உலகில் சஞ்சரிப்பேன். அது என்னால் விளக்க முடியாத ஒன்று.”
தனது இசையமைக்கும் பாணி குறித்து இளையராஜா கூறிய வார்த்தைகள் இவை.
‘அன்னக்கிளி’ தொடங்கி ‘விடுதலை 2’ வரை, வினைல் ரெக்கார்டுகள் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை, ஏறக்குறைய 50 ஆண்டுகளாகப் பல தலைமுறைகள் கடந்தும் இளைராஜாவின் இசையும் குரலும் கொண்டாடப்படுகிறது.
பண்ணைபுரம் முதல் லண்டன் சிம்ஃபொனி வரை
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற ஊரில் இருந்து, தனது 25வது வயதில் (1968), இசைதான் வாழ்க்கை என்ற முடிவோடு மெட்ராஸ் (சென்னை) வந்தார் இளையராஜா.
அவர் அப்போது மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினார். இளையராஜாவின் குழுவில் இருந்த பாடகி கமலா, தன்ராஜ் மாஸ்டர் என்பவரைப் பரிந்துரைத்தார். அவரிடம் மாணவராகச் சேர்ந்தார் இளையராஜா.
தனது வாழ்க்கையின் முக்கியமான மூன்று பேர் என இளையராஜா குறிப்பிடுவது, தன்ராஜ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேசன் மற்றும் கடவுள் மூகாம்பிகை.
இதில் ஜி.கே. வெங்கடேசன் என்பவர் 1960கள் மற்றும் 70களில் கன்னட திரைப்படத் துறையில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர். அவரிடம் சிறிது காலத்திற்கு இசை உதவியாளராகப் பணிபுரிந்தார் இளையராஜா.
பட மூலாதாரம், Ilaiyaraajalive
“தன்ராஜ் மாஸ்டர்தான் ராசையா என்ற பெயரை மாற்றி ராஜா என வைத்தார். பின்னர் பஞ்சு அருணாச்சலம் ராஜாவை இளையராஜா என்று மாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, ‘இசைஞானி’ என்ற பட்டத்தை வழங்கினார். எல்லோரும் என் பெயரை மாற்றிவிட்டார்கள்,” என்று தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார் இளையராஜா.
இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’, 1976இல் வெளியானபோது, அதன் பாடல்கள் வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. காரணம் அதில் ஒலித்த புதுமையான கிராமத்து இசை.
“படம் வெளியான நேரத்தில், ஒருமுறை நான் நடைபயிற்சி செய்யக் கிளம்பும்போது, பக்கத்து வீட்டின் வானொலியில் ‘அடுத்த பாடல் அன்னக்கிளி படத்தில் இருந்து’ என அறிவித்தார்கள். உடனே பக்கத்து வீட்டுக்காரர் ‘அன்னக்கிளி பாடல் போடுகிறார்கள்’ என்று பிறரையும் அழைத்தார். நான் தெருவைக் கடப்பதற்குள் அனைத்து வீட்டு வானொலிகளிலும் அந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது” எனத் தனது முதல் திரைப்படம் தொடர்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார் இளையராஜா.
இளையராஜாவின் தாக்கம்
பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
அதன் பிறகு, எத்தனையோ பாடல்கள், திரைப்படங்கள் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா.
ஆனால் இளையராஜாவின் இசையை, குறிப்பாகப் பின்னணி இசையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற திரைப்படம் என்றால், அது 1977இல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’. அன்னக்கிளிக்கும் 16 வயதினிலே படத்திற்கும் ஒரு வருடம்தான் இடைவெளி என்றாலும், இளையராஜா அதற்கு இடையே 11 படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இளையராஜா, “16 வயதினிலே படத்திற்கு முன்பு வரை இயக்குநர்கள் கேட்டதை மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், அந்தப் படத்தில்தான், பின்னணி இசையில் நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் செய்ய பாரதிராஜா ஒப்புக்கொண்டார். அந்தப் படத்திற்குப் பிறகுதான், எல்லாப் படங்களுக்கும் பின்னணி இசையில் என்னால் முழுமையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது” என்று கூறினார்.
ஒரு காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லாவிட்டாலும்கூட, தனது பின்னணி இசை மூலமாகவே கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் இளையராஜா வல்லவர்.
அதற்கு உதாரணமாக, இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘வீடு’ திரைப்படத்தில், தனது பேத்தி கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டை முருகேசன் எனும் தாத்தா கதாபாத்திரம் (நடிகர் சொக்கலிங்க பாகவதர்) சுற்றிப் பார்க்கும் ஒரு காட்சியைக் கூறலாம்.
பட மூலாதாரம், Instagram/ilayaraja_official
கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பைத் தாண்டி இசை மூலம் ஒரு படத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை 1988இல் வெளியான ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற திரைப்படம் மூலம் இளையராஜா நிரூபித்திருப்பார்.
இந்தத் திரைப்படம் மலையாள இயக்குநர் ஃபாசில் (நடிகர் பஹத் ஃபாசிலின் தந்தை) இயக்கிய ‘என்டே மாமட்டுக் குட்டியம்மாக்கு’ என்ற படத்தின் ரீமேக். தமிழிலும் அவரே இயக்கியிருப்பார். அதே கதை, அதே திரைக்கதை, அதே இயக்குநர். ஆனால் மலையாளத்தில் வேறொரு இசையமைப்பாளர். தமிழுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார்.
தமிழில் வரும் பின்னணி இசை, குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் இசையை, மலையாள படத்தோடு ஒப்பிட்டால் இளையராஜா ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது புரிந்துவிடும். ஒரு குழந்தையைப் பிரிந்து செல்லும் தாயின் உணர்வுகளை மிக அழகாகத் தனது இசையின் வாயிலாகக் கடத்தியிருப்பார்.
பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja
கடந்த 1970களின் இறுதியில் தொடங்கி, 1990களின் தொடக்கம் வரை தமிழ் சினிமாவின் பாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரபலமான பாடலை போட்டுக் காட்டி, இதற்கு யார் இசையமைப்பாளர் எனக் கேட்டால், யோசிக்காமல் பலரும் கூறும் பதில் ‘இளையராஜா’.
உதாரணமாக ரஜினிகாந்த் நடித்து 1980களில் வெளியான மனிதன், ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், தாய் வீடு போன்ற படங்களின் பாடல்களைக் கேட்கும் பலர், இளையராஜாதான் இசையமைப்பாளர் என்றே நினைப்பார்கள்.
சங்கர்-கணேஷ், சந்திரபோஸ் போன்ற இசையமைப்பாளர்கள் அப்போது பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ள போதும், ’80களில் தமிழ் சினிமாவில் இளையராஜா மட்டுமே இசையமைப்பாளராக இருந்தார் அல்லது ஒரு நல்ல ரெட்ரோ தமிழ்ப் பாடல் என்றால் ராஜாவின் இசையாகவே இருக்கும்’ என்ற பிம்பம் உருவாகும் அளவுக்கு அவரது பாடல்கள் பெருமளவில் தாக்கம் செலுத்தின.
அதன் தாக்கம் குறித்த ஒரு பிரபலமான உதாரணம்தான், தமிழ்நாட்டின் சிறுநகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் பேருந்துகளில் இன்றும் ஒலிக்கும் ‘இளையராஜா பாடல்கள்’.
நாளை (மார்ச் 8) லண்டனில், வேலியன்ட் (Valiant) என்ற பெயரில், இளையராஜா உருவாக்கிய முதல் சிம்ஃபொனி வெளியிடப்பட இருக்கிறது. சிம்ஃபொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாகக் கருதப்படும் நிலையில், இதை வெறும் 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதற்காகக் கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் உள்படப் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அவரை நேரில் சந்தித்தும், சமூக ஊடகங்கள் மூலமும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இளையராஜா எனும் எழுத்தாளர்
பட மூலாதாரம், kumudam puthagam velieedu
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி, பலரும் அறியாத இளையராஜாவின் மற்றொரு முகம் அவர் ஒரு எழுத்தாளர் என்பது.
- உண்மைக்கு திரை ஏது?
- என் நரம்பு வீணை
- யாருக்கு யார் எழுதுவது? (தொகுப்பு)
- யாதுமாகி நின்றாய்
- சங்கீத கனவுகள்
- வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது
- வழித்துணை
- துளிக்கடல்
- ஞான கங்கா
- பால் நிலாப் பாதை
- நாத வெளியினிலே
- பள்ளி எழுச்சிப் பாவைப் பாடல்கள்
- இளையராஜாவின் சிந்தனைகள்
- இளையராஜாவிடம் கேளுங்கள்
- வெண்பா நன்மாலை
- ஆதிசங்கரரின் விவேக சூடாமணி
- இளையராஜா ஆய்வுக் கோவை
இவை அனைத்தும் இளையராஜா எழுதிய நூல்கள்.
“இளையராஜா, மரபுக் கவிதைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதுவே திரைப்படங்களில் பாடல்கள் எழுதவும், புத்தகங்களை எழுதவும் அவரைத் தூண்டியுள்ளது” என்கிறார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் பரத் ஸ்ரீராம். இளையராஜா எழுதிய நூல்கள் குறித்து இவர் ஆய்வு செய்துள்ளார்.
“பெரும்பாலும் அவர் எழுதிய புத்தகங்களில் ‘தத்துவ ஞானம்’ சார்ந்தும், ‘சித்தர் இலக்கியங்களின்’ தொடர்ச்சி போலவும் இருக்கும். அவரது ஆன்மீக ஈடுபாடு, வாழ்க்கை குறித்த அவரது பார்வை ஆகியவற்றை அதில் புரிந்துகொள்ளலாம். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் எழுதியவை மிக இயல்பாக இருக்கும். திருக்குறள் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் தனது எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பார்,” என்கிறார் பரத் ஸ்ரீராம்.
இளையராஜா எழுதியவற்றில், ‘பால் நிலாப் பாதை’ என்ற புத்தகத்தில் சிறு வயதில் கம்யூனிசம் மீது தான் கொண்ட ஈர்ப்பு முதல் தனது சினிமா பயணம் வரை பல விஷயங்களை பேசியிருப்பார். தனது புகழ்பெற்ற பாடல்கள் உருவான விதம் குறித்தும் அவர் விவரித்திருப்பார்.
அதற்குச் சான்றாக, ரஜினிகாந்த் நடிப்பில் 1984இல் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று’ என்ற பாடலைக் கூறலாம். அப்போது ஹெர்னியா அறுவை சிகிச்சையால் பேச முடியாமல் இருந்தபோதும், விசில் சத்தம் மூலம் பாடகர் எஸ்பிபி-க்கு பாடலையும், குழுவினருக்கு இசைக் குறிப்புகளையும் கொடுத்து பாடலை உருவாக்கியதாக புத்தகத்தில் விவரித்திருப்பார் இளையராஜா.
இளையராஜாவும் சர்ச்சைகளும்
பட மூலாதாரம், Getty Images
இளையராஜா இதுவரை ஐந்து முறை இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு படங்களுக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
பழசிராஜா என்ற மலையாள திரைப்படத்திற்காகவும் இயக்குநர் பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காகவும் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இளையராஜா வென்றுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
அதேநேரம் இளையராஜா குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2022இல், பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அண்ட் மோதி’ என்ற தலைப்பில் ப்ளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதே ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டார்.
பல்வேறு தருணங்களில் அவர் தனது மனதில் பட்டதை அப்படியே பேசியதும், ‘பாடல்களுக்கான காப்புரிமை’ தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு அனுப்பிய நோட்டீஸ் போன்றவையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இதையெல்லாம் கடந்து அவரது இசைக்காக இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் கொண்டாடப்படுவார் என்பதே அவரைக் கொண்டாடும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு