விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப்பட்ட கோலி, சர்வதேச டி20-யிலும் டெஸ்ட்டிலும் ஓய்வுபெற்றுவிட்டதால் இப்போது அது கொஞ்சம் கடினம்தான்.
அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் இப்போதைக்கு கோலியின் இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதாக மட்டும்தான் இருக்கிறது.

அதற்கு அவரை அணியில் எடுப்பார்களா என்ற கேள்வி தேர்வுக்குழுவின் செயல்பாடுகளால் எழுந்தாலும், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் பேக் டு பேக் டக் அவுட் ஆனாலும் கடைசிப் போட்டியில் ரோஹித்துடன் கடைசிவரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தது கிளாசிக்.
எனவே கோலியை அவ்வளவு சீக்கிரம் தேர்வுக்குழு புறக்கணிப்பதெல்லாம் கடினம்.
இவ்வாறிருக்க, மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் கோலி நேற்று முன்தினம் (நவம்பர் 5) தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.