காலையில் வந்த மணமகன் வீட்டார் மாலை 5 மணி வரை காத்திருந்தார்கள். ஆனால் பெண் வீட்டில் இருந்து யாரும் வந்து அழைத்துச்செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தீபக் குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்கள் வந்த கிராமத்தில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட திருமண மண்டபம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். ஆனால் அது போன்ற ஒரு திருமண மண்டபமே அந்த கிராமத்தில் இல்லை என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். துபாயில் தொழிலாளியாக வேலை செய்யும் தீபக்குடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் போன் மூலம் பேசி திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
திருமணத்திற்கு முன்பு மணமகளுக்கு தீபக் குமார் 50 ஆயிரம் ரூபாயை டிரான்ஸ்பர் செய்திருந்தார். இன்ஸ்டாகிராம் காதலியும், அவரது பெற்றோரும் தங்களது மொபைல் போனை ஆப் செய்துவிட்டனர். அதன் பிறகுதான் மோசடி செய்யவே இத்திருமண ஏற்பாடு என்பதை தீபக் குமார் தெரிந்து கொண்டார்.
தீபக் குமாரின் தந்தை பிரேம் சந்த் இது குறித்து கூறுகையில்,”‘திருமணத்திற்கு சமையல்காரர்கள், டாக்சி, வீடியோகிராபர் என அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். திருமணத்திற்கு வரும்படி உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். மணப்பெண் கவுர் தான் பெரோஷாபூரில் வேலை செய்வதாக சொன்னார். அவரது பெற்றோரிடம் பல முறை போனில் பேசிய பிறகுதான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம்” என்று ஆதங்கப்பட்டார்.
தீபக் குமாரும் அவரது பெற்றோரும் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கவுரும், அவரது குடும்பத்தினரும் ஏமாற்றியது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜிந்தர் தெரிவித்தார்.