இன்புளி வெஞ்சோறு, வாழை இலை அல்வா, கருப்பு கவுனி பிரௌனி; கோவையில் கமகமத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்!

Share

அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2’ பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு 11 மாவட்டங்களில் நடந்த இந்தப் போட்டி, இம்முறை 13 மாவட்டங்களில் நடைபெறுகிறது. மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (15/02/2025) கோவையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும், இந்தப் போட்டியின் முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்துள்ளனர் .

யூடியூப் மற்றும் சமையல் துறையில் பிரபலமாக உள்ள செஃப் தீனா இப்போட்டியின் நடுவராகச் செயல்பட்டு வருகிறார். பாரம்பர்ய சிறுதானிய உணவுகள் தொடங்கி அசத்தும் அசைவ உணவுகள் வரை அறுசுவை உணவுகளை சமைத்து வந்து அதகளப்படுத்தினார்கள்.

இன்புளி வெஞ்சோறு, பஞ்ச தானிய சாதம், கருப்பு கவுனி பிரௌனி, மஷ்ரூம் சந்தகை, சுட்ட கத்தரிக்காய் கோட்சு, காட்டு யானை அம்பை இலும்பை பூசம்பா நீர் கொழுக்கட்டை, வாழை இலை அல்வா, பூங்கர் அரிசி கேசரி, சிவப்பு பசலை பன்னீர் மிளகாய் மசாலா, காரமான சக்கரவல்லி பேன் கேக், ஸ்ட்ராபெரி ஊறுகாய், ஆவாரம் பூ கவுனி அரிசி புட்டு, நெல்லிக்காய் புட்டிங், வெற்றிலை பக்கோடா, பாதாம் பிசின் பாயசம், புளியங்கொட்டை பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகளை சமைத்து அசத்தினார்கள். துரித உணவுகள் வேகமாக பரவும் நிலையில், பாரம்பர்ய அரிசி மற்றும் தானிய வகைகளைக் கொண்டு எண்ணற்ற உணவு வகைகளை தயாரித்து வியப்படைய செய்தனர்.

இவர்களில் சிறப்பான நபர்கள், லைவ் குக்கிங் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அதிலும் சிறப்பாகச் செயல்படுவோர் சென்னையில் நடைபெறும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து அவள் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 நிகழ்வு நாளை சேலத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com