சென்னை: இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியபோது இதை கூறி இருந்தார்.
“இந்தி நம் தேசிய மொழி அல்ல; அது நமது அலுவல் மொழி. இதை இங்கு சொல்ல நினைத்தேன். நான் இந்திய அணியின் கேப்டனாக முடியாமல் போனதற்கு இன்ஜினியரிங் ஒரு காரணம் என சொல்வேன். என்னிடம் யாராவது வந்து உன்னால் முடியாது என்றால் நான் எழுந்து விடுவேன். அதுவே முடியும் என்று சொன்னால் தூங்கி விடுவேன்.
நிறைய பேர் நான் இந்திய அணியின் கேப்டன் ஆகலாம் என சொல்லியதால் தான் நான் தூங்கிவிட்டேன். இன்ஜினியரிங் சார்ந்த ஆசிரியர்கள் யாரவது ‘நீ கேப்டனாக முடியாது’ என சொல்லி இருந்தால் நிச்சயம் எழுந்திருந்திருப்பேன்.
வாழ்நாள் முழுவதும் எப்போதும் நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் தான் கற்றுக் கொள்வதை நிறுத்த மாட்டீர்கள். அப்படி இல்லையென்றால் கற்றல் நின்றுவிடும். அதோடு சிறந்து விளங்குதல் என்பது உங்கள் கப்-போர்டில் ஒரு வார்த்தையாக மட்டுமே எஞ்சி இருக்கும்.” என அஸ்வின் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.