சிட்னி: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு முடிவை கையில் எடுத்தாலும், அவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்பும் சக்தியும், திறனும் இந்திய கிரிக்கெட் அணி வசம் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.
“ஓய்வு பெறுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகத்தான வீரர்கள். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இளம் வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதை நாம் பார்க்கிறோம். அதனால் அவர்கள் ஓய்வு பெற்றாலும் அந்த இடத்தை நிரப்பும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. திறன் படைத்த இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் உள்ளனர்.
ஜெய்ஸ்வால் ஒரு சூப்பர் ஸ்டார். நான் கண்டு ரசித்த சிறந்த வீரர்களில் ஒருவர். அவரும், இங்கிலாந்தின் ஹாரி புரூக்கும் அடுத்த தலைமுறைக்கான வீரர்கள். அதை அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். மெல்பர்னில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார். பெர்த் போட்டியில் அவரது ஆட்டம் அபாரம். ரோஹித் ஓய்வுக்கு பிறகு பும்ரா தான் அணியின் தலைவன். நான் பார்த்த தலைசிறந்த பவுலர்களில் ஒருவர். இந்த தொடரில் சிறந்த தாக்கத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியிலும் சீனியர் வீரர்கள் உள்ளனர். கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் அடுத்த ஆஷஸ் தொடர் வரை விளையாடலாம். சர்வதேச கிரிக்கெட் களத்தில் அவர்களது சர்வைவல் குறித்து காலம் தான் பதில் சொல்லும். அவர்கள் ஓய்வு பெற்றாலும் அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருக்கும். மகத்தான வீரர்கள் விலகும் போது அணியில் சில மாற்றங்கள் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.