ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் | Australian Open tennis Championship 2025 Day 2

Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியன் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரான சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-2), 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

17-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாஃபோ 7-6, 6-3, 4-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் 61-ம் நிலை வீரரான பிரான்சின் ஆர்தர் ரிண்டர்கினெக்கையும், 27-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோர்டர்ன் தாம்சன் 7-6 (7-3), 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 87-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டொமினிக் கோப்ஃபரையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

11-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 5-7, 3-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் 42-ம் நிலை வீரரான அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் 77-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் செவ்சென்கோ வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

10-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், 104-வது இடத்தில் உள்ள இத்தாலியின் பிரான்செஸ்கோ பாசரோவை எதிர்த்து விளையாடினார். இதில் பிரான்செஸ்கோ பாசரோ 7-2, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து போது காயம் காரணமாக கிரிகோர் டிமிட்ரோவ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிரான்செஸ்கோ பாசரோ 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 50-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கேத்ரினா சினியகோவாவையும், 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சோபியா கெனினையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

7-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 105-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்டை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். 21-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரன்கா 2-6, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் 76-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 16-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 3-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் 421-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கிடம் வீழ்ந்தார்.

23-ம் நிலை வீராங்கனையான போலந்தின் மக்தலேனா பிரெச் 6-4, 6-4 என்ற செட் கணக்கல் ரஷ்யாவின் பொலினா குடர்மெடோவாவையும், 25-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லியுட்மிலா சம்சோநோவா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த கமிலா ரகிமோவாவையும், 28-வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com