மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் பார்க்கில் இன்று (12-ம் தேதி) தொடங்குகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவ் உள்ளிட்ட முன்னி வீரர்கள் களமிறங்குகின்றனர்.
போட்டியின் முதல் நாளான ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், வைல்டு கார்டு வீரரான பிரான்ஸின் லூகாஸ் பவுலியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். 6-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு, ஸ்பெயினின் ஜாமே முனாருடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோ கோ காஃப், முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனின், இத்தாலியின் ஜாஸ்மின் பவ்லினி, சீனாவின் செங் கின்வென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
போட்டியின் முதல் நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார். 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென், ருமேனியாவின் தகுதி நிலை வீராங்கனையான அன்கா டோடோனியுடன் மோதுகிறார். 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவா, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவாவுடன் மோதுகிறார். நேரம்: காலை 6 மணி முதல், நேரலை: சோனி லிவ், ஜியோ டிவி
மெல்பர்ன் நகரில் இன்று (12-ம் தேதி) தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகிறது. இது 113-வது ஆஸ்திரேலிய ஓபன் தொடராகும்.
ரூ.510 கோடி பரிசுத் தொகை: ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.510 கோடி ஆகும். இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.18.52 கோடி பரிசுத் தொகையுடன் 2 ஆயிரம் புள்ளிகள் வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் வீரர் ரூ.10.05 கோடியுடன் 1,300 புள்ளிகளை பெறுவார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 2 ஆயிரம் புள்ளிகளுடன் ரூ.18.52 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடம் பெறும் வீராங்கனை 1,300 புள்ளிகளுடன் ரூ.10.05 கோடியை பெறுவார். இதுதவிர ஒவ்வொரு சுற்றுடன் வெளியேறும் வீரர், வீராங்கனைகளுக்கு அதற்கு தகுந்தவாறு பரிசுத் தொகையும் புள்ளிகளும் வழங்கப்படும்.
ஹாட்ரிக் கைகூடுமா? மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். அவர், 2024 மற்றும் 2023-ம் ஆண்டில் வாகை சூடியிருந்தார். இதற்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை சபலென்கா சமன் செய்யும் முனைப்பில் உள்ளார்.
128: ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 128 வீரர்களும், மகளிர் ஒற்றையர் பிரிவில் 128 வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர். ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் தலா 64 ஜோடிகளும், கலப்பு இரட்டையர் பிரிவில் 32 ஜோடிகளும் விளையாடுகின்றன.
சுமித் நாகல்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் சுற்றில் இன்று செக் குடியரசின் தாமஸ் மச்சாக்குடன் மோதுகிறார். 27 வயதான சுமித் நாகல், டென்னிஸ் தரவரிசையில் 96-வது இடத்தில் உள்ளார். தாமஸ் மச்சாக் 26-வது இடத்தில் உள்ளார்.