டேராடூன்: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது. எரியும் காரிலிருந்து முன்-கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். எனினும், அவர் தலை, கால்கள் மற்றும் முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டன.
தற்போது அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்த்தின் குடும்ப உதவியாளர் அளித்த பேட்டியில், “நேற்று முதல் அவரது உடல்நிலை கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளதால் அவரை எங்கும் மாற்றுவதற்கான உடனடித் திட்டம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
பந்த்துக்கு மருத்துவம் பார்த்துவரும் மருத்துவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “ரிஷப் பந்த் நெற்றியில் ஒரு சிறிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தொடர்ந்து மேக்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுடனும், பந்தின் குடும்பத்தினருடனும் தொடர்பில் உள்ளது. அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். அவரை டெல்லிக்கு மாற்ற வேண்டுமா இல்லையா என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.