ஷார்ஜா: வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபரின் அற்புத செயல்பாடு வெற்றிக்கு துணையாக அமைந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். இருப்பினும் முகமது நபி மற்றும் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஆகியோர் இணைந்து 104 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நபி 84 ரன்கள் மற்றும் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 52 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் தஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசூர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. 25.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது வங்கதேசம். இருப்பினும் அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட் மளமளவென சரிந்தது. கூடுதலாக 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. 34.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 92 ரன்களில் ஆப்கன் வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசன்ஃபர் 6.3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 25 பந்துகளை ரன் கொடுக்காமல் வீசி இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டி 9-ம் தேதி நடைபெறுகிறது. ஷார்ஜா மைதானத்தை தங்கள் வெற்றிக் கோட்டையக கட்டமைத்து வருகிறது ஆப்கன் அணி. கடந்த முறை இங்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை ஆப்கன் வென்றது குறிப்பித்தக்கது.