அறிவோம் ஆட்டிசம்… அலர்ட்டாய் இருப்போம்! | We know autism … we will be alert!

Share

நன்றி குங்குமம் தோழி

உங்கள் குழந்தை உங்களது கண்களைப் பார்த்து பேசவில்லையா?  யாரிடமும் பழகாமல் தனியாக விளையாடுகிறதா? உங்கள் குழந்தையிடம் ஏதேனும் வித்தியாசமான உடல்மொழி தென்படுகிறதா? இது ஆட்டிசம் பாதிப்பாகக் கூட இருக்கலாம். ஆம், இந்தியாவில் அனேகக் குடும்பங்களில் இன்றைக்கு ஆட்டிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இரண்டாம் தேதி ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டிசம் பற்றி இங்கே நாம் சற்று விரிவாகவே தெரிந்துகொண்டு, நம் வீட்டில் உள்ள மழலைகளை முத்தாய் வளர்த்தெடுக்கலாம் வாருங்கள்.

ஆட்டிசம் என்றால்…?

*ஆட்டிசம் (Autism) என்பது மதியிறுக்கம். அதாவது, இயல்பில் இருந்து விலகிய நிலை. இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால், இவர்கள்  சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு உடையவர்களாக இருப்பார்கள்.

*ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளை, தனக்கு வரும் தகவல்களைப் பயன்படுத்தி புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது.

*இது ஒரு குறைபாடுதானே தவிர நோய் இல்லை என்றாலும், இக்குறைபாட்டை முற்றிலும் ஒழிக்க மருத்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரவுகள் சொல்வது…?

*குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் கணக்குப்படி அமெரிக்காவில் நாற்பத்தி நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்போடு இருக்கிறது.

*இந்தியாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு பத்தாயிரம் குழந்தைகளுக்கும் இருபத்தி மூன்று குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்பு கொண்டிருக்கிறார்கள்.

*சுமார் 125 குழந்தைகளில்  ஒரு குழந்தை  ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட எதிர்காலத்தில் வாய்ப்புகள் உள்ளன.

*இருபத்தி ஏழு ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்போடு இருக்கிறது.

*116 பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் பாதிப்போடு இருக்கிறது.

*ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் முப்பத்தியொரு சதவிகிதம் – எழுப துக்கும் குறைவான திறன் உள்ளவர்கள் (Less than 70 IQ).

*இருபத்தி ஐந்து சதவிகிதம் – நடுமத்தியில் இருப்பவர்கள் (borderline 71 to 85).

*நாற்பத்து நான்கு சதவிகிதம் –  அனைவரும் போன்ற சராசரி அறிவுத் திறன் உடையவர்கள் (more than 85).

*ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நாற்பது சதவிகிதம் பேர் பேச்சு பயிற்சிகள் எடுத்தும் பேச முடியவில்லை என்கிறது ஓர் ஆய்வு.

*ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எட்டு வயதைக் கடந்த குழந்தைகளில் இருபத்தி எட்டு சதவிகிதம் பேர் ‘தன்னை தானே தாக்கும் பழக்கம்’ உடையவர்களாக இருக்கின்றனர். (உதாரணமாக: தலையை மோதிக்கொள்வது, கைகளை கடித்துக் கொள்வது, தோலை பிராண்டிக் கொள்வது போன்றவை).

*ஆட்டிசம் பாதித்த குழந்தைகளில் முப்பது முதல் அறுபது சதவிகிதம் வரை ‘ADHD’ என்னும் கவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.

*பாதிக்கும் அதிகமான ஆட்டிசக் குழந்தைகள் தூங்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

*இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு வலிப்புநோய் சிக்கல் இருக்கின்றன.

*தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் வராது என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

அறிகுறிகள்…

*கற்பதில் சிரமம்.

*மற்றவரிடம் பழகுவதில் கடினம்.

*பேச்சில் தாமதம்.

*தம்முடைய உடல்மொழிகளால் மற்றவர்களோடு தொடர்புகொள்ள இயலாமை. உதாரணமாக : நாம் புன்னகைத்தால் பதிலுக்கு அவர்களால் புன்னகைக்கத் தெரியாது. நாம் ‘டாட்டா’ காட்டினால் திரும்ப காட்டத் தெரியாது.

*விழித்திருக்கும் அத்தனை நேரமும்  அவர்களுக்கான தனியுலகில் தான் இருப்பார்கள். இதனால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்றே தோன்றும்.

*முகம் பார்த்து பழக மாட்டார்கள்.

*அவர்கள் பெயர் சொல்லியோ, செல்லப் பெயர்கள் வைத்து கூப்பிட்டாலோ திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.

*அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோ லேசில் அழுக மாட்டார்கள்.

*ஆபத்தைப் பற்றி பயப்பட மாட்டார்கள். உதாரணமாக : சாலைகளில் காரணமின்றி வேகமாக ஓடுவது, உயரமான இடங்களில் ஏறுவது…

*அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். அதேபோல் அவர்களின் திறமைகளும் மாறுபடும்.

*மற்ற குழந்தைகள் போல் கண்ணில் படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்கவும், அதனை வாங்கி விளையாடவும் மாட்டார்கள்.

*நிற்பது, நடப்பது போன்ற வளர்ச்சி படிநிலைகளில் சில குழந்தைகளுக்கு தாமதம் ஏற்படும்.

*சில குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல சிரிப்பது, பேசப் பழகுவது, சரியான மாதத்தில் நிற்பது, நடப்பது போன்ற அனைத்தையும் செய்திருக்கும். ஆனால், திடீரென இரண்டு முதல் மூன்று வயதிற்குள் பேசுவதை நிறுத்திவிடும், நம்முடன் பழகாது. இப்படிப் பாதியிலும் அறிகுறிகள் தென்படும்.

காரணமும் ஆபத்து காரணிகளும்…

*இதுதான் காரணம் என இதுவரை சரியான காரணங்கள் எதுவும் கண்டறிய முடியவில்லை. என்றாலும், மரபியல் காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

*வயது அதிகமான பின் தம்பதிகள் குழந்தை பெறுவது.

*ஏற்கனவே ஆட்டிசம் பாதித்த குழந்தை ஒரு தம்பதியருக்கு இருப்பின், அவர்களுக்கு அடுத்து பிறக்கும் குழந்தைக்கு இரண்டு முதல் பதினெட்டு சதவிகிதம் வரை ஆட்டிசம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

*நெருங்கிய உறவுமுறை திருமணம்,*குழந்தை கருவிலிருக்கும்போது தாய்க்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால்.

*கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பிரச்னை இருந்தால்.

*கர்ப்பமாய் இருக்கும்போது ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால்.

*கர்ப்பிணியின் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகள் சாப்பிடுவது போன்ற காரணிகள் குழந்தைக்கு இக்குறைபாடு ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

கண்டறிய…

*மேல் சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே குழந்தையை அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடமோ, குழந்தை நல மருத்துவரிடமோ அழைத்துச் செல்லவேண்டும். அவர்கள் முழுதும் பரிசோதனை செய்து கண்டறிவர்.

*குழந்தை பிறந்து ஒன்றரை ஆண்டிற்குள் இந்தக் குறைபாட்டை சுலபமாய் கண்டறிய முடியும்.

*வலிப்பு நோய், மூளையில் நீர் கோத்திருத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால் மட்டுமே ஸ்கேன் போன்றவை தேவைப்படும்.

தீர்வு…

முன்னரே சொன்னது போல் இதற்கு முழுமையான தீர்வு கிடையாது எனினும்,

1.அறிகுறிகளை சரி செய்வது இல்லை கட்டுக்குள் கொண்டு வருவது (எ.கா: தொடர் சிகிச்சை செய்து வந்தால் நாம் கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பார்கள்),
2.பேச வைப்பது,
3.அவர்களுக்குப் புரியும் வகையில் படிக்க வைப்பது,
4.எந்தத் துறையில் எவ்விஷயங்களில் ஆர்வம் இருக்கிறதோ அதில் அவர்களை மேம்படுத்துவது (எ.கா: ஒரு பாதிக்கப்பட்ட நபருக்கு பொறுமையாக, அழகாக காய்கள் நறுக்கத் தெரிந்திருந்தால் அவர்களை உணவகங்களில் வேலைக்கு சேர்த்துவிடுவது).
5.தினசரி வாழ்க்கை சவால்களுக்கு பழக்குவதன் மூலம்  குழந்தை நம் காலத்திற்குப் பின்பும் தன்னிச்சையாக வாழ வழிசெய்ய முடியும் (உதாரணமாக: குளிக்க, பல் துலக்க, உடைகளை தானே உடுத்திக்கொள்ள போன்றவை).

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

குழந்தைகளை மேல் சொன்ன அறிகுறிகளில் இருந்து மீட்டெடுத்து, அவர்களை தினசரி வாழ்க்கைக்கு பழக்கி, அவர்களின் திறன்களை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை மெருகூட்டுவது போன்றவற்றை இயன்முறை மருத்துவர்கள் தரும் ‘விளையாட்டு வழி’ தெரபி மூலம் அடையலாம். வாரத்திற்கு மூன்று முதல் ஆறு நாட்கள் சிகிச்சை தேவைப்படும். அதனைக் குறைந்தது ஆறு வருடங்களாவது செய்துவரவேண்டும்.

மொத்தத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைக்கு ஆட்டிசம் எனக் கண்டறியப்பட்டால் உடனே பயம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர்களுக்குத் தேவை கூடுதல் அன்பும் ஆதரவும்தான் என்பதால், தாமதமின்றி வேண்டியவற்றை செய்து வந்தால் அவர்களும் ஒருநாள் சாதனையாளர்கள்தான். மேலும், சர் ஐசக் நியூட்டன், பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் பதித்துக்கொண்டு நம்பிக்கையோடு வாழவேண்டியது அவசியம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com