பட மூலாதாரம், Getty Images
2014 மக்களவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு 3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. இப்போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், கேஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு கேஜ்ரிவால் முதன் முதலாக தோல்வியை சந்தித்தார். இரண்டாவது தோல்வியை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பர்வேஷ் வர்மாவிடமிருந்து தற்போது எதிர்கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தோற்றுவிக்கப்பட்டதுடன், அதன் முதல் வெற்றியும் டெல்லியில்தான் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி 2013 முதல் டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் 2025 சட்டமன்ற தேர்தலில் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்று சிறைக்கு வெளியே இருக்கும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியை சந்தித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய அரவிந்த் கேஜ்ரிவால், தான் நேர்மையானவரா இல்லையா என்பதை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் என கூறியிருந்தார்.
கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருந்தால் அது அவரது நம்பிக்கையை அதிகரித்திருக்கும். அவர் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாக பாஜகவைத் விமர்சித்திருக்கலாம்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுதும். இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அரசு பஞ்சாபில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இந்த தோல்வி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியலையும் பாதிக்கலாம். டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ஆம் ஆத்மியில் அரவிந்த் கேஜ்ரிவால் பிடி தளருமா? தேசிய அரசியலில் ராகுல் காந்தி பலனடைவாரா?
பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் மீதான தாக்கம்
டெல்லியில் கேஜ்ரிவால் அடைந்த தோல்வி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சுதந்திரத்தை அதிகரிக்கும் என்றும் கேஜ்ரிவாலின் செல்வாக்கு குறையும் என்றும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக இருக்கும் அசுதோஷ் குமார் கருதுகிறார்.
“பஞ்சாப் அரசு டெல்லியிலிருந்து நடத்தப்படுவதாக அம்மாநிலத்தில் பேசப்படுகின்றது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவு அதன் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியும். ஆம் ஆத்மி கட்சிக்கு 90க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாலும், அவர்கள் யாரும் அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்ப மாட்டார்கள் என்பதாலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு கவிழாது. பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் கேஜ்ரிவாலின் விசுவாசியாக கருதப்படுகிறார். ஆனால் இப்போது அவர் தலையை உயர்த்தி தனியாக செயல்பட முடியும். இருப்பினும், பகவந்த் சிங் மானுக்கு அமித் ஷாவுடனும் நல்ல உறவுகள் இருக்கின்றன”, என்று அசுதோஷ் குமார் கூறுகிறார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் தோல்வி பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக பயனளிக்கும் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் வலுவாக உள்ளது, கேஜ்ரிவாலின் தோல்வி அதன் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.
“2027 இன்னமும் தொலைவில் உள்ளது. ஆனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மீண்டுவருவது சுலபமல்ல. கேஜ்ரிவாலின் தோல்வி பஞ்சாபில் காங்கிரஸுக்கு மட்டுமல்லாது, பகவந்த் சிங் மானுக்கும் நல்லது. ஹரியாணாவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி விரும்பியது, ஆனால் ராகுல் காந்தி அதற்கு தயாராக இல்லை. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் இதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் தயாராக இல்லை. ஒருவேளை கூட்டணி இருந்திருந்தால், டெல்லியில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.” என்கிறார் பேராசிரியர் அசுதோஷ் குமார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கூற வரும் செய்தி, டெல்லிக்கு மட்டுமானதல்ல. இந்த ஆண்டு பிகாரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளன. அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருந்தால், பிகாரில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையோடு அணிதிரண்டிருக்கலாம். அரவிந்த் கேஜ்ரிவால் தொடக்கத்திலிருந்தே டெல்லி மற்றும் பஞ்சாபைத் தாண்டி ஆம் ஆத்மி கட்சியை வளர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் இந்த தோல்வி, அந்த முயற்சிக்கு ஒரு தடையாக மாறலாம்.
இந்த தோல்விக்கு பிறகு கேஜ்ரிவாலின் அரசியல் மிக மோசமாக பாதிக்கப்படும் என குஜராத் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பேராசிரியராக இருக்கும் கௌரங் ஜானி கருதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இப்போது கேஜ்ரிவால் என்ன செய்வார்?
“டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு குறியீடாக முக்கியம். இது பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் தோல்வியடைந்ததைப் போன்றது. கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருந்தால், பாரதிய ஜனதா கட்சி தன்னை ஊழல் வழக்கில் சிக்க வைத்தது என்று சொல்ல அவருக்கு தைரியம் இருந்திருக்கும், ஆனால் இப்போது அவர் அப்படிச் சொல்லக்கூட முடியாது”, என்று பேராசிரியர் ஜானி கூறுகிறார்.
“இப்போது பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதா அல்லது காங்கிரஸை எதிர்ப்பதா என்பது குறித்து கேஜ்ரிவால் சிந்திக்க வேண்டும். கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பலவீனப்படுத்தியுள்ளார். கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சிக்குதான் உதவினார். கொள்கை ரீதியாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் குழப்பமானது, இந்த தோல்விக்குப் பிறகு அவர் தனது நிலையை தெளிவுபடுத்தலாம்,” என்கிறார் பேராசிரியர் கெளரங் ஜானி.
அரவிந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோதிக்கு சவாலாக சிலர் கருதினர். பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைவாத அரசியலை கேஜ்ரிவால் சிறப்பாக எதிர்கொண்டார் என அரசியல் ஆய்வாளர்கள் நம்பினர்.
“பெரும்பான்மைவாத அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள கேஜ்ரிவால் முயன்றார் என சிலர் நம்புகின்றனர். ஆனால் ஆட்சி முறை என்ற விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைவாத அரசியலை கேஜ்ரிவால் சிறப்பாக எதிர்கொண்டார் என்று நான் நம்புகிறேன்”, என்று ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் துணைப் பேராசிரியராக இருக்கும் சுதீர் குமார் கூறுகிறார்.
“கேஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு, பெரும்பான்மைவாத அரசியலை எதிர்கொள்ள சிறந்த வழி எது என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. பாஜகவின் அரசியலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் வசம் பல ஆயுதங்கள் இருப்பதாக தெரியவில்லை”, என்று அவர் தெரிவித்தார்.
இந்த தோல்விக்குப் பிறகு, அரசியலில் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள கேஜ்ரிவால் மேலும் போராட வேண்டியிருக்கும் என சுதிர் குமார் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகள் மீதான தாக்கம் என்னவாக இருக்கும்?
“ஆம் ஆத்மி கட்சி நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போராட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு தலைவராக உருவெடுத்தார். இப்போது அரசுக்கு சவால் விடுக்க எந்த நபருக்கும் போதிய இடம் இல்லை. இதுபோன்ற ஒரு அரசியல் சூழலில், தம்மை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வது அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சுலபமானதல்ல, ” என்கிறார் சுதிர் குமார்.
2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பாக பஞ்சாபிலிருந்து தர்மவீர் காந்தி என்பவர் நாடாளுமன்ற உறுப்பினரானார். கேஜ்ரிவாலுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, யோகேந்திர யாதவுடன் அவரும் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தற்போது பட்டியாலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
“ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற தோல்வி பஞ்சாப் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் இருந்து நிதி கிடைக்கிறது. டெல்லி தோல்விக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவு இனி புது தெம்புடன் அவரை எதிர்கொள்ளலாம்“, என்றார் தர்மவீர் காந்தி
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் தோல்விக்குப் பிறகும் எதிர்க்கட்சிகளிலிருந்து யார் பிரதமர் மோதிக்கு சவால் விடமுடியும் என்ற கேள்வி மேலும் பெரிதாகி உள்ளது. ராகுல் காந்திக்கான இடம் உறுதியாகி வருகிறதா?
“அரவிந்த் கேஜ்ரிவாலின் தோல்வியால் ராகுல் காந்தி பலனடைவாரா என்பதை சொல்வது கடினம். பாரதிய ஜனதா கட்சி தனது பலவீனங்களையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடியது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவிழந்தது, ஆனால் காங்கிரஸால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. பாரதிய ஜனதா மத்திய பிரதேச மாநிலத்தில் பலவீனமடைந்தது, ஆனால் காங்கிரஸ் இதனால் துளியும் பயனடையவில்லை. கேஜ்ரிவாலின் தோல்விக்கு பிறகு, எதிர்க்கட்சிகளிடமிருந்து மோதிக்கு யார் சவால் விடுவார்கள் என்ற கேள்வி இன்னமும் பெரிதாகியிருக்கிறது என நான் நினைக்கிறேன்,” என்கிறார் சுதீர் குமார்.
“இப்போது பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் இந்துத்துவா அரசியல் செய்கிறது. நல்லாட்சி என்பதை பயன்படுத்தி இந்த அரசியலை எதிர்கொள்ள கேஜ்ரிவால் முயற்சி செய்தார், ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் மத சார்பின்மை பேசுகிறது, ஆனால் பெரும்பான்மைவாத அரசியலில் இதை யார் கேட்பார்கள்? இப்போது கேஜ்ரிவால் வலுவிழந்தால், ராகுல் அதனால் பலனடைவாரா என்பதை சொல்வது கடினம்.”, என்று பேராசிரியர் கெள்ரங் ஜானி கூறுகிறார்.
“நாட்டில் பிராந்திய கட்சிகளின் பிடி தளர்ந்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் நவீன் பட்நாய்க்கை வீழ்த்திவிட்டது, பீகாரில் ஜே.டி.யு.வை ஒரு சிறிய கூட்டணிக் கட்சியாக மாற்றிவிட்டது, மகாராஷ்டிராவில் சிவசேனாவை வலுவிழக்கச் செய்துவிட்டது, ஹரியாணாவில் ஐ.என்.எல்.டி. பயனற்று இருக்கிறது, தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். பலமிழந்துள்ளது. இப்போது அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசு டெல்லியை விட்டுச் செல்லப் போகிறது” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.