காவல் ஆணையர் விஜயகுமார் கூறியதாவது:
“பல வகையான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது டிஜிட்டல் கைது (Digital Arrest).”
அதிகாரியைப் போல நடித்து, போதைப்பொருளைக் கடத்தியதாக ஒருவரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுவார்கள். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு லட்சம், கோடி எனத் திருடுவார்கள்.
இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே ஆளாகியுள்ளனர். இந்த மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் –இந்தியாவில் டிஜிட்டல் கைது (Digital Arrest) என்பது கிடையவே கிடையாது.
அடுத்து, பங்குச் சந்தை மோசடிகள்: AI காலகட்டத்தில் மக்களின் பேராசை மனோபாவத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக போலி பங்குச் சந்தை செயலிகளை அறிமுகப்படுத்துவார்கள்.
குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் தரும் வகையிலான ஸ்கிரீன்ஷாட்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவார்கள். அதிக லாபம் ஈட்டியதாகக் கூறி மக்களை நம்பவைத்து, முதலீடு செய்ய வைத்து மோசடிக்கு உள்ளாக்குவார்கள்.
இவ்வகை மோசடியில் சாதாரண மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக நம்மிடம் ஒரு பழமொழி உண்டு.
‘பேராசை பெருநஷ்டம்’ என்பதே அது. இதை மனதில் நிறுத்த வேண்டும். உழைத்து ஈட்டும் செல்வமே நிலையானது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.