வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள் வைத்து முறை செய்து பெண்ணை அழைக்கச் செல்வார்கள். அவரவர் முறைப்படி நேரடியாக மண்டபத்திற்க்கு அல்லது மாப்பிள்ளை வீட்டிற்க்கு சென்று விட்டு பின் மண்டபத்திற்க்கு அழைத்துச் செல்வார்கள்.
திருமணம் என்பது எதிர்ப்பார்த்த சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அதை மீறிய ஒரு கலக்கம், அழுத்தம். “இந்த வீட்டை விட்டு போகப்போறோம்” என்று மணப்பெண்ணுக்கும், “பெண்ணைப் பிரியப் போகிறோம்” என்று பெற்றவர்களுக்கும், உற்றவர்களுக்கும் ஏற்படும் ஒரு உணர்வு, அதை சொல்லில் வடித்துவிட முடியாது.
மனதில் “கவலை பாதி, களிப்பு பாதி கலந்து செய்த கலவை நான்” னு அந்த உணர்வு போடும் ஆட்டம் மிகப்பெரிய கோலாட்டம்.
மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்து நலங்கு வைத்து, சம்பிரதாயங்கள், விருந்து என அனைத்தும் முடிந்ததும், தொடங்கும் முக்கிய நிகழ்வு. வீட்டின் பெரியவர்கள் சாமிக்கு சூடம் ஏற்றி பெண்ணை ஆசீர்வதிக்கும் வண்ணம் திருநீறு, குங்குமம் வைத்து விடுவார்கள்.
அப்போது “மடை திறந்து தாவும் நதியலை நான்” னு மனதின் அழுத்தம் அருவியாக கண் வழியே பொழியத் தொடங்கும். பெண்கள் மட்டுமல்ல, அன்று தான் அப்பாக்கள், அண்ணன், தம்பிகள், மாமாக்கள் கூட அழுவதை பார்க்க முடியும் (யார்ப்பா சொன்னது ஆண்கள் அழ மாட்டார்கள் என்று…).
மிகவும் உணர்வுப்பூர்வமான, மனதை நெகிழச் செய்யும் உணர்வுக்குவியலின் நேரமது.