சென்னை: பிளவுபட்ட அதிமுகவில் பாஜ எந்த கூட்டணியில் இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு நிறுவன நாளை காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் கொண்டாடினர். சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கொடியை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார். அப்போது, சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், கட்சி அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் ஏற்பாட்டில், பி.கக்கன் உருவச் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் தேசிய எஸ்.சி.துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, ஜெயக்குமார் எம்.பி., எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகரன், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி மற்றும் நிர்வாகிகள் மயிலை தரணி, தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, கக்கனின் மகள் கஸ்தூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தேசிய தலைவர் நட்டா கோவை நிகழ்ச்சியில் பேசும்போது, ‘ பாஜவில் இருக்கும் தலைவர்கள் ஒரு மணி நேரம் கூட நாட்டிற்காக சிறையில் இருந்தது கிடையாது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். மதச்சார்பற்ற அணியோடு இணைந்து பெரிய அணியாக காங்கிரஸ் இருக்கிறது. அதிமுக பிளவுபட்டு இரண்டு அணிகளாக உள்ளது. அதில் எந்த அணியில் பாஜ இருக்கிறது என்றே தெரியவில்லை. இதையெல்லாம் பாஜ உணராமல் இரவு நேரத்தில் சூரிய ஒளியில் பேசிக் கொண்டிருப்பது போல் பேசி வருகிறார் ஜே.பி.நட்டா. தமிழுக்காக அதிக நிதி வழங்கியுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். செம்மொழி அந்தஸ்தில் உள்ள தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்துக்கு தான் அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக இதுவரை எந்த நிதியும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.