இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது.
மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது.
அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது.