இந்த ஏலத்தில் கமாலினி, ஜோஷிதா என இரண்டு தமிழ்நாடு வீராங்கனைகள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அகாடெமியின் வளர்ப்பான இளம் கமாலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருப்பது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஓப்பனராக இறங்கி அதிரடியாக ஆடக்கூடிய கமாலினி, இந்திய அண்டர் 19 அணிக்கு பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை யஸ்திகா பாட்டியா காயத்தால் அவதிப்பட்டால் அவருக்கு மும்பையின் ஓப்பனராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே அந்த அணியில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணன், தமிழ் பேசக்கூடிய சஜனா சஜீவன் ஆகியோர் இருப்பது நிச்சயம் கமாலினிக்கு பேருதவியாக இருக்கும்.
ஆல்ரவுண்டரான ஜோஷிதாவை அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. அந்த அணியில் ரேணுகா தாக்கூர் தவிர்த்து பெரிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. போக, அவரும் ஐபிஎல் அரங்கில் சோபிக்கவில்லை. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய ஜோஷிதாவுக்கு நிச்சயம் ஒரு கட்டத்தில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு
இந்த ஏலத்தில் அனைத்து ஓவர்சீஸ் ஸ்லாட்களையும் நிரப்பிவிட்டு பங்கேற்றிருந்த ஒரே அணி ஆர்சிபி மட்டும்தான். அதனால் அவர்கள் இந்திய வீராங்கனைகளில், பேக் அப் ஆப்ஷன்களில் கவனம் செலுத்தினார்கள். பிரமிளா ராவத் (ஆல்ரவுண்டர் – 1.2 கோடி), ஜோஷிதா (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்), ராகவி பிஷ்ட் (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்), ஜக்ராவி பவார் (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்) ஆகிய நால்வரை அந்த அணி வாங்கியது. காயத்தால் அவதிப்படும் ஆஷாவுக்கு பிரமிளா நல்ல பேக் அப். கனிகா அஹுஜா காயத்திலிருந்து திரும்பி வருவது அந்த அணியின் மிடில் ஆர்டரை இன்னும் பலப்படுத்தும். டேனியல் வயாட்-ஹாட்ஜ் டிரேட் செய்யப்பட்டிருப்பதால், ஓப்பனிங்குக்கு நல்ல பேக் அப் இருக்கிறது. எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் ஆகியோரின் ஃபார்ம், ஃபிட்னஸ் நன்றாக இருந்தால் நிச்சயம் பட்டத்தை தக்கவைக்க முடியும்.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்னை விக்கெட் கீப்பர் மூலம் அவர்களுக்கு ரன் வராதது. அதனால் இந்த ஏலத்தில் அவர்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களை வாங்கியிருக்கிறார்கள். சாரா பிரைஸ், நந்தினி கய்ஷப் இருவரையும் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது கேபிடல்ஸ். நந்தினி கஷ்யப் இப்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். WPL அணிகள் அசோசியேட் பிளேயர்களையும் சேர்த்து 5 வெளிநாட்டு வீரர்களை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் என்பதால், அவர்கள் அந்த ஆப்ஷனையும் பயன்படுத்த முடியும். இவர்கள் போக, ஶ்ரீசரணி (ஆல்ரவுண்டர் – 55 லட்சம்), நிக்கி பிரசாத் (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்) ஆகியோரை அந்த அணி வாங்கியிருக்கிறது. ரிலீஸ் செய்த முன்னணி லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் இடத்துக்கு யாரையும் அவர்கள் வாங்கவில்லை. அதனால் அவர்களிடம் முன்னணி லெக் ஸ்பின்னரே இல்லை. ஆனால், அவர்கள் கடந்த 2 சீசன்களிலும்கூட பூனமை பெரிதாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அது அவர்களைப் பெரிதாக பாதிக்காது. மூன்றாவது ஃபைனலுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு.
மும்பை இந்தியன்ஸ்
கமாலினி (விக்கெட் கீப்பர் – 1.6 கோடி), நடீன் டி கிளார்க் (ஆல்ரவுண்டர் – 30 லட்சம்), அக்ஷிதா மஹேஷ்வரி (ஆல்ரவுண்டர் – 20 லட்சம்), சன்ஸ்கிரிதி குப்தா (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்) ஆகியோரை இந்த ஏலத்தில் வாங்கியிருக்கிறது மும்பை. யஸ்திகா காயத்தால் அவதிப்பட்டால், அவருக்கு பேக் அப் ஆக கமாலினி, ஷப்னிம் இஷ்மாய்லுக்கு பேக் அப் ஆக நடீன் டி கிளார்க் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த அணியில் பெரிதாக சிக்கல்கள் இல்லை என்பதால் அவர்கள் சரிசெய்ய இந்த ஏலத்தில் எதுவும் இருக்கவில்லை. நிச்சயம் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கு ஏற்ற அணி அவர்களிடம் இருக்கிறது.
உபி வாரியஸ்
டாட்டினுக்குக் கடுமையாகப் போட்டியிட்ட வாரியர்ஸ் கடைசியில் அலானா கிங்கை (ஸ்பின்னர் – 30 லட்சம்) தான் வாங்கியது. கிராந்தி கௌட் (ஆல்ரவுண்டர் – 10 லட்சம்), ஆருஷி கோயல் (பேட்டர் – 10 லட்சம்) ஆகியோரையும் இந்த ஏலத்தில் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் பெரிய சிக்கலாக இருந்த வேகப்பந்துவீச்சை சரிசெய்யாமல் விட்டிருப்பது ஆச்சர்யமளிப்பதாகவே இருக்கிறது. பல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்கள் இருந்தபோது கிங்கை வாங்கியது குழப்புவதாகவே இருக்கிறது. நிச்சயம் அந்த அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாகவே இருக்கிறது.
குஜராத் ஜெயின்ட்ஸ்
சிம்ரன் ஷேக் (பேட்டர் – 1.9 கோடி), டியாண்ட்ரா டாட்டின் (ஆல்ரவுண்டர் – 1.7 கோடி), டேனியல் கிப்சன் (ஆல்ரவுண்டர் – 30 லட்சம்), பிரகஷிகா நாயக் (ஸ்பின்னர் – 10 லட்சம்) என இந்த ஏலத்தில் 4 வீராங்கனைகள் வாங்கியது ஜெயின்ட்ஸ். இதன்மூலம் நிச்சயம் அந்த அணி முன்பைவிட பலமாகியிருக்கிறது. சிம்ரன் ஷேக் அந்த அனியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தியிருக்கிறார். டாட்டின் வந்திருப்பது பேட்டிங், வேகப்பந்துவீச்சு இரண்டையுமே பலப்படுத்தும். அதேசமயம் அவர்களின் ஸ்பின் அட்டாக் பெரும்பாலும் ஆஷ் கார்ட்னரையே நம்பியிருக்கும். அதை கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.!