Women's T20 WC: 'ஹர்மன்ப்ரீத் கவுர்… இதெல்லாம் நியாயமா?' – அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா?

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் நேற்று ஒரு முக்கியமான ஆட்டம் நடந்திருந்தது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியிருந்தன. லீக் சுற்றை கடந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் எனும் சூழல். வெல்வதற்கு அத்தனை வாய்ப்புகளும் இருக்கவே செய்தது. ஆனாலும், மிகமோசமாக அடிப்படையான விஷயங்களில் கூட கோட்டைவிட்டு இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது.

Ind Vs Aus

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிஸா ஹீலி காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. அதுவே இந்திய அணிக்கு பெரிய சாதகமான விஷயம்தான். ஆஸ்திரேலியாதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சௌகரியமாக இந்த ஸ்கோரை எட்டிவிடவில்லை. ஆரம்பத்திலெல்லாம் கொஞ்சம் திணறிதான் இந்த ஸ்கோரை எட்டியிருந்தது. பவர்ப்ளேக்குள் 37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த தாலியா மெஹ்ராத்தும் க்ரேஸ் ஹாரிஸூம் 62 ரன்களுக்கு கூட்டணி அமைத்திருந்தனர். சூப்பர் ஸ்டாரான எல்லிஸ் பெர்ரியும் கொஞ்சம் அதிரடியாக ஆடி 32 ரன்களை சேர்த்திருந்தார். இவர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களை எட்டியது. ஷார்ஜா மைதானத்தில் இந்தத் தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. இந்திய அணியும் ஆரம்பத்திலிருந்தே தடுமாறத்தான் செய்தது. ஸ்மிருதி மந்தனா இந்தப் போட்டியிலும் சொதப்பினார். 12 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்து சோபியின் பந்தில் lbw ஆகினார். ஷெபாலியும் ஜெமிமாவும் வேக வேகமாக ரன்கள் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தி தவறான ஷாட்களை ஆடி கேட்ச் ஆகினர். இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தீப்தி சர்மாவும் கூட்டணி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி நன்றாக ஆடினால்தான் உண்டு என்ற நிலையில் கொஞ்ச நேரம் நின்று ஆடி 63 ரன்களை இந்தக் கூட்டணி சேர்த்தது. ஆனால், போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழலில் தீப்தி சர்மா 16 வது ஓவரில் சோபியின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அழுத்தம் மொத்தமும் ஹர்மன்ப்ரீத் கவுர் மீதே ஏறியது. அவரும் முடிந்தளவு போராடி பார்த்து கடைசியில் கோட்டைவிட்டார்.

Harmanpreet

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அரைசதத்தை கடந்து நிறைய பவுண்டரிக்களை அடித்து ஹர்மன் நல்ல டச்சில் இருந்தார். ஆனால், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து நம்பர் 8 பேட்டரான பூஜாவுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தார் ஹர்மன். இதையே ஏற்றுக்கொள்ள முடியாது. ஹர்மன் இதற்கடுத்து செய்ததெல்லாம் கிரிக்கெட்டின் அடிப்படையே தெரியாதவர் செய்வதைப் போன்று இருந்தது. இரண்டாவது பந்தில் பூஜா அவுட். மூன்றாவது பந்தில் ஹர்மனுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து அருந்ததி ரன் அவுட்.

கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவை. ஹர்மன்ப்ரீத் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். அவருக்கேற்ற சூழல் இது. நன்றாக செட்டில் ஆகயிருக்கிறார். மேலும், இதே மாதிரியான சூழலில் அவரளவுக்கு இந்திய அணியில் வேறு யாராலும் பெரிய ஷாட்களை ஆடவே முடியாது. அனுபவமிக்க வீராங்கனை என்பதால் மற்றவர்களை விட சூழலை சிறப்பாகவும் கையாள முடியும். ஆனால், அந்த நான்காவது பந்தில் ஹர்மன் என்ன செய்தார் தெரியுமா? சிங்கிள் தட்டினார். இந்திய அணியின் தோல்வி அங்கேயே உறுதியாகிவிட்டது.

Harmanpreet

இத்தனைக்கும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டரை குறைவாகத்தான் நிறுத்த முடிந்திருந்தது. சூழலையும் தன் மீதான பொறுப்பையும் உணர்ந்த எந்த கேப்டனும் அப்படியொரு தற்கொலைக்கு சமமான விஷயத்தை செய்யமாட்டார்கள். ஆனால், டி20 உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ஆடி வரும் ஹர்மன் அதை செய்தார்.

மிடில் ஓவர்களில் தீப்தியும் ஹர்மனும் அமைத்த கூட்டணியின் மூலம் கொஞ்சம் ரன்கள் சேர்ந்திருந்தாலும் அதை இன்னும் நன்றாகவே செய்திருக்கலாம். 7 – 15 இந்த 9 ஓவர்களில் இந்தக் கூட்டணி ஒரு 2 ரன்களை கூட ஓடி எடுக்கவில்லை. ஓடி எடுத்தது எல்லாமே சிங்கிள்கள் மட்டும்தான்.

ஆஸ்திரேலியா பவர்ப்ளேயில் குறைவாக ரன்கள் எடுத்திருந்த போதும் மிடில் ஓவர்களில் சிங்கிள்களை அப்படியே டபுள் ஆக்கி நிறைய ரன்களை எடுத்திருந்தது. பவுண்டரியின் மீது எப்போதுமே குறி வைத்திருந்தனர். தீப்தி – ஹர்மன் கூட்டணி அப்படி எதுவும் செய்யவில்லை. மந்தமாக சிங்கிள் மட்டுமே தட்டிக் கொண்டிருந்தனர். இக்கட்டான கட்டத்தில் 17 வது ஓவரில் 1 ரன்னை மட்டுமே வேறு எடுத்திருந்தனர். இதையெல்லாம் என்ன சொல்லி விமர்சிப்பதென்றே தெரியவில்லை.

Deepti & Harman

இந்தப் போட்டியை இந்திய அணி வென்றிருந்தால் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், இப்போது நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதும் போட்டியின் முடிவுக்கு இந்திய அணி காத்திருக்க வேண்டும். நியூசிலாந்து அந்தப் போட்டியில் தோற்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஆனால், அப்படியெல்லாம் நடந்து அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இந்த அணி தகுதியானதுதான் என்பதே பெரிய கேள்விக்குறிதான்.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com