இந்தியாவில் நீண்ட காலமாகவே முழுமையான பெண்கள் ஐ.பி.எல் தொடரை தொடங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இன்றும் யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாத பெண்கள் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!
இந்தப் பெண்கள் ஐ.பி.எல் தொடரில் ஐந்து அணிகளுடன் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். ஒரு அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அதில் 6 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளாக இருக்கலாம். போட்டியில் ஆடும் 11 பேரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் வரை இடம்பெறலாம். அந்த ஐந்து பேரில் ஒருவர் ‘Associate’ நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்!
இந்தத் தகவலுடன் தொடர் நடைபெறும் முறையும் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதவேண்டும். ஐந்து அணிகளில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டியில் மற்றொரு அணியாக விளையாடும். தொடரின் அட்டவணை ஆண்கள் ஐ.பி.எல் தொடங்கும் முன்பு வெளியிடப்படும். மொத்தம் 5 அணிகள் மட்டுமே இருப்பதால் முதல் 10 போட்டிகள் ஒரு மைதானத்திலும் அடுத்த 10 போட்டிகள் இன்னொரு மைதானத்திலும் நடைபெறும் என்று தெரிகிறது.
அணிகளை உருவாக்குவதற்கு மொத்தம் இரண்டு திட்டங்களை வைத்துள்ளனர். முதல் திட்டத்தின்படி ஒரே ஒரு ஊர் பெயரை மட்டும் கொண்டு அணியை உருவாக்கப்போவது இல்லை.
இந்தத் திட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். அந்தப் பொதுக்குழுவில் ஐ.பி.எல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்.
உலகின் பல இடங்களில் பெண்களுக்கான டி20 தொடர் பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தி வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் பெண்கள் ஐ.பி.எல் நடைபெறுவது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும்.