சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இன்றைய நாளில் விராட் கோலி அவுட் ஆன விதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. ரிவியூவ் எடுத்திருந்தால் விக்கெட்டை காப்பாற்றியிருக்கலாம் என்ற நிலையில் கோலி ரிவியூவ் எடுக்காமல் சென்றதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் என்ன நடந்தது?

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. பதிலுக்கு வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணி 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே ஆரம்பத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வேகவேகமாக வீழ்ந்திருந்தது. புதிய பந்தில் வங்கதேசத்தின் டஸ்கின் அஹமது அடுத்தடுத்து ரோஹித் சர்மா மற்றும் யாஷஸ்வியின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

நம்பர் 4 இல் விராட் கோலி களமிறங்கினார். கில்லுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி கொஞ்சம் பக்குவமாக ஆடி ரன் கணக்கை கூட்டியது. பார்ட்னர்ஷிப்பையும் பெரிதாக எடுத்து செல்லும் முனைப்போடு ஆடியதாக தெரிந்தது. ஆனால், திடீரென போட்டி நேரம் முடிய சில நிமிடங்களே இருக்கையில் கோலி அவசரப்பட்டதால் அவர் விக்கெட்டை விட வேண்டியதானது.
மெஹிதி ஹஸன் மிராஷ் 20 வது ஓவரை வீசினார். ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி கொஞ்சம் திணறவே செய்கிறார். ஆனால், மெஹிதிக்கு எதிராக கொஞ்சம் ஆதிக்கமாக ஆட முயன்றார். மெஹிதி லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய ஒரு பந்தை லெக் சைடிலேயே திருப்பி அட்டகாசமாக பவுண்டரியாக்கியிருந்தார். அதே ஓவரில் விடாமல் அடுத்ததாகவும் அப்படியே ஒரு ஷாட்டை ஆட முற்பட்டார். இந்த முறை பந்தை பேடில் வாங்கினார். நடுவர் lbw முறையில் அவுட் கொடுத்துவிட்டார். விராட் கோலி கில்லிடம் ஆலோசித்தார். டிவியில் பார்ப்பதற்கே லைனில் சரியாக பந்து விழுந்தது தெரிவதால் கில்லும் விராட்டை ரிவியூவ் எடுக்க பரிந்துரைத்ததாக தெரியவில்லை.

விராட்டும் ரிவியூவ் எடுக்காமல் அவுட்டை ஏற்று பெவிலியனுக்கு சென்றுவிட்டார். ஆனால், ரீப்ளேவில் பந்து பேட்டில் உரசிதான் பேடில் பட்டது தெரிய வந்தது. லைன் பார்ப்பதற்கு வேண்டுமானால் நான் ஸ்ட்ரைக்கர் உதவலாம். பரிந்துரை கூறலாம். ஆனால், பந்து பேட்டில் உரசியதா இல்லையா என்பதை கோலிதான் முடிவு செய்ய வேண்டும். இங்கே கோலி பந்து பேட்டில் உரசியதை உணராமல் ரிவியூவ் எடுக்க தவறி 17 ரன்களில் வெளியேறிவிட்டார்.
கோலி அவுட் ஆகும்போது இரண்டாம் நாள் முடிய மேலும் 13 நிமிடங்கள்தான் இருந்தது. அதற்கு மேல் 3 ஓவர்கள்தான் வீசவும் பட்டது. ஆக, அவர் கொஞ்சம் நிதானமாக தற்காப்பு மனநிலையில் ஆடியிருந்தால் இன்றைய நாளை எளிதாக தாண்டியிருக்க முடியும். சேப்பாக்கத்தில் கோலியிடம் பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41