மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? அதற்குத் தீர்வு என்ன?
– மதுமிதா சதீஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் விவேக் ஐயர்.
“மைக்ரேன் என்பது ஒற்றைத் தலைவலி. மிகவும் பரவலாகக் காணப்படுகிற தலைவலி இது. இந்த பாதிப்புள்ள நபர்களுக்கு, ஒற்றைத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை வைத்தே அவர்கள் தலைவலி வரப்போவதை உணர்வார்கள். வாந்தி உணர்வு, கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கலாம்.
இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் வலிக்கும். அது மெள்ள மெள்ள அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் தலையில் யாரோ இடிப்பது போன்ற தீவிரமான வலியாக மாறும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சத்தத்தைக் கேட்க முடியாது. இருட்டான அறையில் இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பார்கள்.
மைக்ரேன் தலைவலியானது 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கலாம். தலைக்குக் குளிப்பது, வெயிலில் அலைவது, நீண்டதூரப் பயணம், அதிக வாசனையுள்ள பெர்ஃபியூம், மல்லிகைப்பூ வாசனை போன்றவைகூட வலியை அதிகப்படுத்தலாம்.