மைசூரில் ஆரம்பித்த உங்களது ஆரம்பகட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்…
“என் கடந்த கால வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானதுதான். என்னுடைய அப்பா கண் மருத்துவர். அம்மா ஒரு பக்தியான ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த பெண்மணி. மூணு பேரு என் கூட பிறந்தவங்க; அதுல நான் தான் கடைக்குட்டி. அப்பாவின் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலையினால் நாங்க ஒரு ஊருன்னு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் நான் 12 வயது வரை நாத்திகனாக தான் இருந்தேன் எனக்குள்ள நிறைய கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் இருக்காது. பதின் பருவங்களில் நான் மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் மனிதனாகவே இருந்தேன். மேற்கத்திய கலாச்சாரம் என்பது பொருள் சார்ந்த கலாச்சாரம். அதனால்தான் என்னமோ மனிதர்கள் பலர் தங்களின் பதின் பருவங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். பின், நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது மிகவும் ஆர்வமாக இருந்தேன். 18 ,19 வயதில் புரட்சி என்றெல்லாம் போனேன். இந்த மாதிரிதான் என் ஆரம்ப காலக்கட்ட வாழ்க்கை இருந்தது.”
நீங்க யோகியா, குருவாகவா , சத்குருவாகவா இல்லை ஆன்மீகவாதியா? மனதில் உங்களைப் பற்றிய நிலை என்ன?
“உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் என்னை அப்படி எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டேன். சத்குரு மக்கள் எனக்கு வைத்த பெயர் தான். நான் என்னை அப்படி நினைக்கவில்லை.”