ஆனால், ஒரு சமூக மக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி பொதுவானவராக இருக்க முடியும்… அனைத்து தரப்பு மக்களையும் அவரால் ஒரே மாதிரி பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்து. விஜய் மாநாடு குறித்து தி.மு.க-வுக்கு பயம் இருப்பதாகதான் நினைக்கிறேன். தி.மு.க-வை தவிர வேறு எந்தக் கட்சியும் வளரக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது திமுக. ஜனநாயக ரீதியில் கட்சி தொடங்கி மாநாடு நடத்த நடிகர் விஜய் கட்சியினர் அனுமதி கேட்டால், அனுமதி கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை.
இதை இவ்வளவு பெரிய சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியமில்லை. விஜய்-ன் அரசியல் வருகை… விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது முதல் கோணல்… முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே போகப் போகத்தான் அவரின் அரசியல் குறித்து தெரியும். 2014-க்கு முன்னாள் ஆட்சியில் இருந்தது UPA அரசு. அப்போது மீனவர்கள் தினம் தினம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடக்கவில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை மீட்டு வருகிறோம்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க, ஆழ்கடல் படகுக்கு 30 சதவிகித வங்கிக்கடன் கொடுக்கிறோம். இதை தவிர்த்து, மீனவர்கள் எல்லைப் பகுதியை கடக்காமல் இருக்க, மீனவர்களின் படகுகளில் பொருத்துவதற்கு 1 லட்சம் ஜிபிஎஸ் கருவிகள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே கடல் பாசிக்கென தனி பூங்காவை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருக்கிறது பா.ஜ.க அரசு. கடல் சீற்றத்தால் எல்லை தாண்டிப் போகும் மீனவர்களின் படகுகள் தான் கைப்பற்றப்படுகிறது. அதை மீட்பதற்கான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டார்.