Varun Chakaravarthy: 'கண்டுகொள்ளாத தேர்வுக்குழு; குறிவைத்து தூக்கிய கம்பீர்; கம்பேக் கொடுத்த வருண்!

Share

‘இந்திய அணியில் இடமில்லாமல் வெளியில் இருக்கும்போது நம்முடைய கரியரே முடிந்துவிட்டதென்று எளிதில் எழுதிவிடுவார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறேன். உணர்ச்சிமிகு தருணம் இது. மறுபிறவி எடுத்து வந்ததை போல உணர்கிறேன்.’ இவ்வாறெல்லாம் பேசியிருப்பது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. கடைசியாக 2021 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக ஆடியிருந்தார்.

இந்தியா

அதன்பிறகு, இப்போதுதான் மூன்று ஆண்டுகள் கழித்து வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கியிருந்தார். மிகச்சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். மிகச்சிறப்பான கம்பேக் இது.

வருண் சக்கரவர்த்திக்கு இப்போது 33 வயது. வழக்கமாக இந்திய அணிக்கு வீரர்கள் அறிமுகமாகும் சராசரி வயதைக் கடந்துதான் அவர் இந்திய அணிக்கு அறிமுகமாகியிருந்தார். TNPL மூலம் மிஸ்டரி பௌலராக கவனம் ஈர்த்து ஐ.பி.எல் க்கு அறிமுகமானார். 2020 ஐ.பி.எல் சீசன் தமிழக வீரர்களுக்கு மிகச்சிறப்பான சீசனாக இருந்தது. நடராஜன் அந்த சீசனில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருந்தார்.

2020 ஐ.பி.எல் சீசனுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு நடராஜன் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த சுற்றுப்பயணத்திலேயே மூன்று பார்மட்களிலுமே நடராஜன் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். கோலியும் ரஹானேவும் வெற்றிக்கோப்பைகளை நடராஜனனின் கையில் கொடுத்து கொண்டாடினார். ஆனால், இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு நடராஜனுக்கு முன்பு இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது வருண் சக்கரவர்த்திதான். அவருக்கு கடைசி நிமிடத்தில் காயம் ஏற்படவே அந்தத் தொடரிலிருந்து விலகினார். வருண் சக்கரவர்த்தி விலகிய அந்த இடத்துக்குதான் நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திடீர் காயத்தால் வருண் சக்கரவர்த்தியின் இந்திய கனவு தகர்ந்திருந்தது.

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி தவறவிட்டது ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில் அந்த 2020 சீசனில் வருண் சக்கரவர்த்தி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நல்ல ஃபார்மில் இருந்தபோது இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். ஒன் சீசன் வொண்டர் ஆக ஐ.பி.எல் இல் ஒரே சீசனோடு காணாமல் போன வீரர்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றனர். அதேமாதிரி, வருண் சக்கரவர்த்தியும் ஒன் சீசன் வொண்டராக இருப்பாரோ எனும் ஐயமும் பலருக்கும் இருந்தது. ஆனால், வருண் சக்கரவர்த்தி தன்னுடைய சீரான தன்மையை நிரூபித்தார். 2021 ஐ.பி.எல் சீசன் இந்தியா – அமீரகம் என இரண்டு கட்டங்களாக நடந்திருந்தது. இரண்டிலுமே வருண் சக்கரவர்த்தி நன்றாக ஆடியிருந்தார். மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2021 ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பையும் அமீரகத்திலேயே நடந்ததால் அந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அந்த உலகக்கோப்பையே இந்தியாவுக்கு மோசமான அனுபவமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளிலேயே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே வருண் சக்கரவர்த்தியும் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தியிருக்கமாட்டார். உடனே லெவனிலிருந்து ட்ராப் செய்யவும்பட்டார். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கியிருந்தார்கள். ஆனால், அதிலும் வருணால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. இந்தியா மட்டுமல்ல வருணும் அந்த உலகக்கோப்பையில் வெறும் கையோடு நாடு திரும்பினார். வெறுமென ஐ.பி.எல் போட்டிகளை மட்டுமே கணக்கில் வைத்து இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்தால் இந்திய அணி இப்படித்தான் தோற்கும் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அத்தோடு இந்திய அணியின் தேர்வுக்குழு ரேடாரிலிருந்தும் வருண் சக்கரவர்த்தி ஓரங்கட்டப்பட்டார்.

வருண் சக்கரவர்த்தி

அப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. வருண் மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஆனாலும் அவர் ஒரு பக்கம் விடாமல் ரொம்பவே சீராக தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக ஆடிக்கொண்டே இருந்தார். 2022 சீசனில் கொஞ்சம் சொதப்பினாலும் 2023 சீசனில் 20 விக்கெட்டுகளையும் 2024 சீசனில் 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சுனில் நரைன் மாதிரியான உலகத்தரமான வீரர் ஒருவர் இருக்கும் கொல்கத்தா அணியில் அவரைத் தாண்டி ஒருவர் சிறப்பாக ஆடுவதே ஆச்சர்யமாக இருந்தது. கொல்கத்தா அணியின் ஸ்பின் ட்வின்களாக சுனில் நரைனும் வருண் சக்கரவர்த்தியும் கலக்கியிருந்தனர். கொல்கத்தா அணி மீண்டும் சாம்பியன் ஆனதற்கு மிக முக்கிய காரணமாக வருண் சக்கரவர்த்தி திகழ்ந்தார்.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டிருந்தது முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர்தான். அவர்தான் வருண் சக்கரவர்த்தியின் திறனை அறிந்து மீண்டும் அவரை இந்திய அணிக்குள் அழைத்து வந்தார்.

வருண் சக்கரவர்த்தி

நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முதல் ஓவரில் கொஞ்சம் தடுமாறி ரன்களை வழங்கிய போதிலும் அடுத்தடுத்த ஓவர்களில் சுதாரித்துக் கொண்டு டைட்டாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

தேர்வுக்குழுவின் ரேடாரிலிருந்து வெளியேறிய பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுப்பதெல்லாம் அசாத்தியமான விஷயம். இப்போது கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி இறுக்கமாக பற்றிக் கொண்டு சாதிக்க வேண்டும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com