இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். எதிர்பார்த்ததை போல நிகழ்வு நடந்து முடிந்திருந்தாலும் தவெக தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது. காரணம், நிகழ்வில் ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவம். நிகழ்வு அரங்கின் கண்ணாடி கதவுகளெல்லாம் உடைபடும் அளவுக்கு ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கு தவெக தரப்பும் காவல்துறையும் மாறி மாறி பழிபோட்டுக் கொள்கின்றனர்.
“ஸ்பாட் அப்டேட்!’
6:20 மணியளவில் நோன்பை முடித்து தொழுகை நடத்தி இஃப்தார் விருந்தை எடுத்துக்கொள்ளும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. தன்னுடைய பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து கட்சியின் இணைப் பொருளாளர் ஜெகதீஸ் மற்றும் அவரின் நலம் விரும்பியான ராஜேந்திரன் ஆகியோருடன் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.
நிகழ்வுக்கு தவெக சார்பில் இரண்டு விதங்களில் இஸ்லாமியர்களை அழைத்திருந்தனர். முதலில் தொகுதிக்கு 5 பாஸ் என கூறப்பட்டு தமிழகம் முழுக்கவும் இருந்து இஸ்லாமிய நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். அதுபோக, நேற்று ஆனந்த் சென்னையிலுள்ள முக்கியமான மசூதிகளுக்கும் சிறுசிறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கி வந்தார். அதன்படி, மதியம் 2 மணியிலிருந்தே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை நோக்கி அழைப்பிதழ் வைத்திருந்த இஸ்லாமியர்கள் வர தொடங்கிவிட்டனர்.