அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.
இந்த சூழலில் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.
“மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது”
அவர் பேசியதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து புரட்சி தலைவர் மூன்று முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்தார்கள். அவர் என்னை அடையாளம் காட்டினார். அதற்கு பிறகு கட்சி இரு கூறுகளாக பிரிந்த நேரத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்களோடு உடனிருந்து பணிகளை ஆற்றினேன். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர், அவருக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் 2026ல் மக்கள் சக்தி மூலமாக தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக அமருவார். வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று.

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை, நேர்மையான ஆட்சியை, புனிதமான ஆட்சியை தமிழகத்தை உருவாக்குவதற்கு புறப்பட்டிருக்கிறார். மக்கள் சக்தியோடு 2026ல் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக அவர் அமர்வார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது.