சுழலைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்புமளவிற்கு, இந்தியாவிடம் ஆப்சன்கள் உள்ளன. ஆனால், வேகப் பந்து வீச்சில், அணி முழு பலத்தோடு இல்லை. புதுப்பந்தில் விக்கெட் எடுக்க சற்றே திணறினர். அர்ஷ்தீப் நம்பிக்கை தந்திருக்கிறார் என்றாலும், பெரிய மேடையில், இன்னமும் பலம் வாய்ந்த அணிகளோடு போதும் போது, அவரால், அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கு ஆசியக் கோப்பை தொடரில் ஓரளவு விடை கிடைக்கலாம். ஆவேஷ் கானின் எக்கானமி, பல போட்டிகளில், 10-ஐ தாண்டி, ஆசியக் கோப்பை தொடரில் இவரது பந்துகள் குறிவைக்கப்படலாமோ என பயமுறுத்தியது. தாக்கூர் கேம் சேஞ்சர்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்தான் என்றாலும், ரன்களை அவர் கசிய விடுவது, ஹீரோ மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு நடுவே அவரை மாறி மாறிச் செல்ல வைக்கிறது. பும்ராவும், புவனேஸ்வர் பார்த்துக் கொள்வார்கள். அர்ஷ்தீப் கூட அடித்துத் துவைப்பார் என்றாலும் கூட, வேகப் பந்து வீச்சுப் படையில், இன்னமும் ஒரு இடம் மிச்சமுள்ளதென்பதே உண்மை. ஆசியக் கோப்பையில், அரபு மண்ணில், சுழல் பலத்தை வைத்துச் சமாளித்தாலும், உலகக் கோப்பைக்குள், இன்னுமொரு பௌலரை, இந்தியா தயார்ப்படுத்த வேண்டும்.
இப்போட்டிகளில், இந்தியத் தலைமை கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. சில போட்டிகளில், ஜடேஜா, ஹுடா ஆகியோர் மற்ற முழுநேர பௌலர்களை விடவும் சிறப்பாகப் பந்து வீசியிருந்தனர். ஆனாலும், அவர்களுக்கு இன்னமும் அதிக ஓவர்களைத் தராமல், மோசமாக வீசினாலும் பரவாயில்லை, `முழுநேர பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை’ என்பது போல், அவர்களுக்கே முழு கோட்டாவும் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு முழுநேர பௌலருக்கு, ஏதோ ஒரு நாள், அவர்களுடைய நாளாக அமையாமல் போகலாம், அச்சமயங்களில், பகுதி நேர பௌலர்கள் சிறப்பாகப் பந்து வீசும் பட்சத்தில், அவர்களுக்கு அதிக ஓவர்கள் அளிக்கப்படும் அணுகுமுறையை இந்தியா கையிலெடுக்க வேண்டும்.
சில போட்டிகளில், டாஸை வென்றாலும், பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பதில், இந்தியாவிடம் ஒரு தயக்கம் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், தங்களால் ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியுமா என்ற ஒரு சின்ன பயம்தான். அது மாற வேண்டுமெனில், ஜிம்பாப்வே ஒருநாள் போட்டிகள் அனைத்திலும், அவர்களை ஆல் அவுட் செய்ததைப் போல, எப்படிப்பட்ட ஸ்கோரையும் இந்த பௌலிங் யூனிட்டால் டிஃபெண்ட் செய்ய முடியுமென்ற நம்பிக்கைக்குரிய ஒன்றாக இந்திய பௌலிங் உருமாற வேண்டும்.