2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காலை 9.45 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மருத்துவ கழிவுகளை கொட்டிய பிரபல மருத்துவமனை : மதுரை மாநகராட்சி நோட்டீஸ்
மதுரை முனிச்சாலை பகுதியில் இயங்கி வரும் அருண் மருத்துவமனை, அதன் மருத்துவ கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டியுள்ளது.
எளிதாக தொற்று நோய் பரப்பும் அபாயமுள்ள கழிவுகளை பொது மக்கள் உபயோகிக்கும் குப்பை தொட்டியில் கொட்டியதை மாநகராட்சி சுகாதார குழுவினர் கண்டறிந்தனர்.
மருத்துவ கழிவுகளை அகற்றி சோதனை செய்து வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேங்கைவயல் விவகாரம்: தனிநபர் ஆணையம் இன்று ஆய்வு
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தனி நபர் ஆணையம் இன்று நேரில் ஆய்வு நடத்துகின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் : தற்போதைய நிலவரம்?
06.05.2023. காலை 08:00 மணி
,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 101.94 அடியில் இருந்து 102.25 அடியாக உயர்ந்துள்ளது. .
நீர்இருப்பு : 67.78 டிஎம்சி உள்ளது.
நீர் வரத்து : நீர்வரத்து வினாடிக்கு 6,712 கன அடியில் இருந்து 6,595 கன அடியாக குறைந்துள்ளது.
நீர் வெளியேற்றம் : அணை மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா
தோஹா டைமண்ட் லீல் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தை தட்டி சென்றார்.
தோஹா டைமண்ட் லீக்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சோப்ரா, இந்த முறை 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக் இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மூன்றாம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா : விழாக்கோலம் பூண்ட லண்டன் நகரம்!
இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ், மன்னராக முடிசூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று லண்டனில் நடைபெற இருக்கிறது.
பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்டபோதிலும் அவரின் முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவரின் முடிசூட்டு விழா லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள west minster abbeyயில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இன்று அந்த விழா நடைபெற இருக்கிறது. இதற்காக லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது
விடிய விடிய வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசிக்கும் பக்தர்கள்!
நாகை எட்டுக்குடி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர். 56 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது நடைபெறும் பால் அபிஷேகத்தை காண 2 முதல் 3 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
குறிப்பாக நேற்று முதல் இன்று அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் குறைவின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
ஐபிஎல் தொடர் – இன்று மும்பையை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு போட்டியில் பெங்களூரு – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எந்தெந்த பகுதிகளுக்கு மழை அலெர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.