தமிழகத்தில் 7 மணி வரை வெளுத்துவாங்கப்போகும் மழை – எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிவரை அநேக இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப்பின் தொடர் : இந்தியாவுக்கு வெண்கலம்
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஷிப்பின் தொடரின் அரையிறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் (14 – 15) தோல்வியடைந்ததால் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய வீராங்கனை பவானி தேவி, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் 40 கிமீ வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு : கமிஷனர் சங்கர் ஜிவால்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், “சென்னை – பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை கடந்து சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும்,
இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்பீடு ரேடார் கன் தொழில் நுட்ப கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதால் தானியங்கி முறையில் வழக்கு பதிவு எனவும் அவர் தெரிவித்தார்.
5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி
ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
பியூலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமனம்
ரமேஷ் சந் மீனா சிறப்பு செய்லாக்கத் திட்டத்துறைச் செயலாளராக நியமனம்
வீர பிரதாப் சிங் வணிகவரி துறை இணை ஆணையராக நியமனம்
விஜயரா ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்
ஆசி மரியம் சிறுபான்மை துறை ஆணையராக நியமனம்
பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமின் மனு ஒத்திவைப்பு
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமின் மனு ஜூன் 20 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சூர்யாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார், மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிபதி பானு உத்தரவிட்டார்.
அரசு இணையத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி…
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் அமைச்சர் என்ற பகுதியில் செந்தில் பாலாஜியின் பெயர் படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி
கடலூரில் தனியார் பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாய், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் நிவாரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் மழை நீர்- அமைச்சர் விளக்கம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ‘சென்னையைப் பொறுத்தவரை நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் சிவதாஸ் மீனா பணியில் இருந்து வருகிறார். சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதையில், ஒரு சுரங்க பாதையில் மட்டுமே மழை நீர் சூழ்ந்து உள்ளது’ என்று தெரிவித்தார்.
2,000 பணியாளர்களைக் கொண்டு மழை நீர் அகற்றும் பணி…
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 செட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. 2,000 களப்பணியாளர் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அமலாக்கத்துறையின் மனு நாளை மறுநாள் விசாரணை
செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு செய்திருந்தது. அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை நாளை மறுநாள் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மழையால் பாதிப்பிருந்தால் தொடர்பு கொள்ளலாம்… திமுக எம்.எல்.ஏ அறிவிப்பு
சென்னையில் பெய்துவரும் மழையால் எனது எழும்பூர் தொகுதியில் ஏதேனும் பாதிப்பிருந்தால் தொகுதி மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரலாம். ஏற்கெனவே எனது வாட்ஸ்அப் பாட் எண்( WhatsApp BOT No) 99409 40405 தங்களின் பயன்பாட்டிற்கு உள்ளதை நன்கு அறிவீர்கள் என்று எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ ஐ.பரந்தாமன் அறிவித்துள்ளார்.
மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை…
சென்னை மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தரமணி, ஆலந்தூரில் தலா 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு…
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 133 ஏரிகள் 75%-100% , 335 ஏரிகள் 50%-75%, 331 ஏரிகள் 25%-50%, 109 ஏரிகள் 25% கீழ் நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மழையால் பெரிய பாதிப்பு இல்லை…
சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. 2 மணி நேரமாக அதிகாரிகளுடன் மழை தொடர்பாக பேசி வருகிறேன். தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஐந்தாவது மாவட்டமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை…
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எதிரொலி- வெளிநாட்டு விமானங்கள் இயக்கத்தில் தாமதம்
சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 17 சர்வதேச விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் உள்நாட்டு விமானங்கள் தாமதமின்றி சென்றன.