நம் நாட்டு மக்கள் என்னென்ன உணவுகளை ஆசையாக ஆர்டர் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது Swiggy நிறுவனம்.
ஃபுட் டெலிவரி நாம் உணவகங்களுக்கு சென்று க்யூவில் நிற்கும் நேரத்தைக் குறைக்கும் என எதிர்பார்த்திருப்போம். ஆனால் இப்போது வீட்டு உணவுக்குக்கூட மாற்றாக மாறிவிட்டது.
பரபரப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் மெட்ரோவாசிகளுக்கு இருந்த இடத்துக்கே சிறந்த உணவகங்களின் உணவை எடுத்துக்கொடுக்கும்போது ஆர்டர் செய்ய ஏன் யோசிக்க வேண்டும்? என ஆர்ட்ர் செய்ததில் சாதனை நிகழ்த்தியிருக்கும் சாதனை இதுதான்.
பிரியாணி விரும்பிகள் சாதனை!
பிரியாணி – இந்த ஆண்டு நாடுமுழுவதும் 83 மில்லியன் அதாவது 8.3 கோடி ஆர்டர்களைப் பெற்று அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகத் திகழ்கிறது. இந்தியர்களின் நாக்கு பிரியாணிக்கு அடிமை என்பதற்கு இந்த தகவல் ஒரு சாம்பிள். ஒரு நிமிடத்துக்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு நொடியில் இரண்டு பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கும்.
இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது, நம் நாட்டின் அறிவிக்கப்படாத தேசிய காலை உணவான தோசை தான். மொத்தமாக 23 மில்லியன் ஆர்டர்கள்.
இனிப்பு வகைகளில் ரசமலாய் மற்றும் சீதாபால் ஐஸ்கிரீம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்!
என்னதான் இந்தியர்கள் அதிகமாக பிரியாணியை ஆர்டர் செய்திருந்தாலும், நம் நாடு பலவித கலாசாரங்கள் சேர்ந்து வாழும் நிலமல்லவா… நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவு வகைகள் அதிகமாக விற்றிருக்கின்றன.
டெல்லியில் சோலே பாதுரே, ஷிலாங்கில் நூடுல்ஸ், சண்டிகரில் ஆலு பரோட்டா, கொல்கத்தாவில் கச்சோரி என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்!
சிக்கன் ஸ்நாக்ஸா?
நொறுக்கு தீனிகளில் சிக்கன் ரோல்கள் அதிகம் விற்பனையாகியிருகின்றன. பிரதான உணவாயிருந்த சிக்கன், ஸ்நாக்ஸாக அதிகம் விரும்பப்பட்டுள்ளது. 2.48 மில்லியன் சிக்கன் ரோல் ஆர்டர்கள் பதிவாகியிருக்கின்றன. நேரம் காலம் தெரியாமல் சாப்பிடும் நம்மவர்கள் இரவு 12 மணி முதல் 2 மணி வரையிலான நேரத்தில் 1.84 மில்லியன் சிக்கன் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளனர்.
அண்ணனுக்கு 250 ஆனியன் பீட்சா பார்சல்!
ஃபுட்டிகள் சாப்பாட்டில் சாதனைகளைப் படைக்கவும் தயங்கவில்லை தவறவில்லை. டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் ஒரே ஆர்டரில் 250 ஆனியன் பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ன் நபரோ 49,900 ரூபாய்க்கு பாஸ்தாக்கள் மட்டுமே ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி சேவகர்கள்!
ஒவ்வொரு முறையும் நமக்காக பல கிலோமீட்டர்கள் உணவை எடுத்துவரும் டெலிவரி பார்ட்னர்கள் எல்லாரும் சேர்ந்து இந்த ஆண்டு முழுவதும் 1.96 பில்லியன் கிலோ மீட்டர் பயணித்துள்ளனர். இது காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை 5,33,000 முறை சென்று வருவதற்கான தொலைவு.
கபில் குமார் பாண்டே என்ற மும்பையைச் சேர்ந்த நபர் 10,703 ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளார். காளீஸ்வரி என்ற கோவையைச் சேர்ந்த பெண் 6,658 ஆர்டர்கள் எடுத்துள்ளார். இவர்கள் இருவருமே ஸ்விகியின் டாப் பர்ஃபார்மர்களாம்.
ஸ்விக்கி என்ற ஒரு செயலியில் மட்டுமே இத்தனை என்றால் மற்ற செயலிகள் எல்லாமே சேர்த்தால் நம் ஆர்டர் செய்து சுவைக்கும் பழக்கம் எவ்வளவு பரவியிருக்கிறது என நினைக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா?