`ஸ்வீட் எடு கொண்டாடு’ என அனைத்து நல்ல விஷயங்களும் இனிப்பில் இருந்தே தொடங்குகின்றன. அதிலும் சீஸ் சேர்க்கப்பட்ட இனிப்புகளுக்கு உலகம் முழுவதும் உணவுப் பிரியர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் `உலகின் சிறந்த 25 சீஸ் இனிப்புகள்’ பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் (Taste Atlas) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் `ரசமலாய்’ (Ras malai) இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து ரசமலாய் வந்ததாக நம்பப்படுகிறது. `ரஸ்’ மற்றும் `மலாய்’ என்ற இரண்டு இந்தி வார்த்தைகளுக்கு `ஜூஸ்’ மற்றும் `க்ரீம்’ என்று பொருள். வெள்ளை க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பனீர் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூ, உலர்ந்த பழங்களைச் சேர்க்கின்றனர். பொதுவாகக் குளிர்ச்சியாகவே ரசமலாய் பரிமாறப்படுகிறது. குறிப்பாக, ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இந்த இனிப்புக்கு அதிக டிமாண்ட் உள்ளது.
`உலகின் சிறந்த 25 சீஸ் இனிப்புகள்’ பட்டியலில் செர்னிக் (Sernik) முதலிடத்தில் உள்ளது. செர்னிக் என்பது முட்டை, சர்க்கரை மற்றும் ட்வாரோக் என அழைக்கப்படும் தயிர் சீஸால் தயாரிக்கப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் துருக்கியர்களுக்கு எதிரான வியன்னா போரில் வெற்றிபெற்ற பிறகு, ஜான் III சோபீஸ்கி மன்னன் இந்த ரெசிபியை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த இனிப்பை மக்கள் உண்டு வருகிறார்கள்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கிரீஸின் `ஸ்ஃபாகியானோபிதா’ (Sfakianopita) இடம் பெற்றுள்ளது. மாவு, ஆலிவ் எண்ணெய், தண்ணீர், உப்பு மற்றும் சிறிது ராகி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் சீஸ் ஸ்டஃப் செய்யப்படுவதற்குப் பதிலாக, மாவை சீஸுடன் சேர்த்துக் கலந்து விடுகின்றனர். அதன்பின் வட்ட வடிவில் ரொட்டி போலத் தட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்கின்றனர்.
உங்களுக்குப் பிடித்த சீஸ் ஸ்வீட் என்ன… கமென்டில் சொல்லுங்கள்!