சரி, எந்த இடத்தில் சர்ஃபராஸ் முன்னிலும் மெருகேறியிருக்கிறார் என்று பார்த்தால் முன்பை விட அவரது பாசறையில் உள்ள ஷாட்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. முன்னதாக அவரிடம் வகைக்கொன்றாக இத்தனை ஷாட்கள் வராது. பிஹைண்ட் த ஸ்கோரில் ஸ்கோர் செய்வார், கவர் டிரைவ்கள் கண்ணைக் கவரும் அவ்வளவுதான். ஆனால், இப்போது, ரெட்பால் கிரிக்கெட்டின் சூர்யக்குமார் யாதவாக, 360 டிகிரி கோணத்திற்கும் பந்துகளைப் பறக்க விடுகிறார். ராம்ப் ஷாட், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட் ஷாட் என வரிசைகட்டுவதோடு, ஸ்பின்னர்களுக்கு எதிராக அற்புதமாக ஸ்வீப் ஷாட்டும் ஆடுகிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடவும் தயங்குவதில்லை.
உத்தரகாண்டுக்கு எதிராக சமீபத்தில் சதத்தை எட்டிய போது அடித்த அப்பர் கட் அத்தனை நேர்த்தியாக இருந்தது. ஃபுட் மூவ்மெண்டில் அவ்வளவு தேர்ச்சி இல்லை என்பதால் ஸ்விங்க் ஆகும் பந்துகளை எதிர்கொள்ள திணறுகிறார் என முன்னதாகக் கிளம்பிய தியரியை எல்லாம் இப்பொழுது ப்ராக்டிகலாக அவரது பேட் மாற்றி எழுதிவிட்டது. அந்தப் பலவீனமே வெளியே தெரியாத அளவு அதனையும் ஈடுகட்டி விடுகிறார். இதுதான் அவரது ரன் மீட்டரை முன்னைவிட முடுக்கியுள்ளது. ஒருவேளை இந்திய அணிக்காக டெஸ்டில் ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தால் பண்டும் இவரும் இணைந்து ஆடுவது எதிரணியை தடுமாறச் செய்யும்.
இந்திய தேர்வாளர்களின் பார்வையில் அவரது இந்த இன்னிங்ஸுகள் பட்டாலும், அணிக்குள் இடம்பெற ஏற்கெனவே கடுமையான போட்டியும் நிலவுவதால் சர்ஃபராஸுக்கு உடனடியாக வாய்ப்புக் கிடைப்பது கடினமென்பதே களநிலவரம். எனினும், சந்தேகமேயின்றி புஜாரா போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிட்டுகளுக்கான அடுத்த தலைமுறை வீரராக கண்டிப்பாக சர்ஃபராஸ் இருப்பார். அதற்கு இன்னமும் சிலகாலம் அவர் பொறுத்திருக்க வேண்டுமென்பதையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டிருப்பது காட்டுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை என்னதான் உள்ளூர் போட்டிகளில் கோலோச்சினாலும் சர்வதேச அணிக்குத் தேர்வாக இந்திய ஏ அணிக்கான போட்டிகளிலோ ஐபிஎல்லிலோ சாதிப்பதுதான் அதற்கடுத்த முக்கிய படி.
சமீபத்தில் நடந்து முடிந்த ‘நியூசிலாந்து ஏ’க்கு எதிரான தொடரில், 3 போட்டிகளில் 99 ரன்களை மட்டுமே சர்ஃபராஸ் சேர்த்திருந்தார். ஐபிஎல்லிற்கும் இன்னமும் மாதக்கணக்கில் இடைவெளியிருக்கிறது. எனவே இந்த ஃபார்மில் இப்படியே தொடர்ந்து வர இருக்கும் உள்ளூர் போட்டிகளினால் தன்னைக் கூர்மையாக்கிக் கொள்வது சர்ஃபராஸுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகிறது. இது இந்தியாவிற்காக ஆடுவதற்கான வாய்ப்புகளுக்கும் அவருக்குமான இடைவெளியைக் குறைக்கும்.
விஜய் மெர்சண்ட், 1940-களில் உலக யுத்தத்தினால் சர்வதேச போட்டிகள் நடைபெறாத சமயத்தில் தனது பேட்டினை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள இடைவெளியே இன்றி டொமெஸ்டிக் கிரிக்கெட் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி ரன்களைக் குவித்திருந்தார். இந்திய கிரிக்கெட்டில் அவருக்கான தனி இடத்தை இந்தக் காலகட்டத்தில் கிடைத்த பயிற்சி அவருக்குப் பெற்றுத் தந்தது. அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் அவர் கோலோச்சியதற்கும் இதுவே உதவியது. சர்ஃபராஸ் செய்ய வேண்டியதும் இதையேதான்.