Samson: “5 பாலுக்கு 5 சிக்ஸ் அடிக்க ரெண்டு வருசம் உழைச்சிருக்கேன்!'' – ரகசியம் பகிரும் சாம்சன்!

Share

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக ஆடி 111 ரன்களை நேற்று அடித்திருந்தார். 40 பந்துகளில் சதமடித்து டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளை விரயம் செய்கிறார் என அவர் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கும் இந்த இன்னிங்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு சஞ்சு சாம்சன் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்தார்.

அங்கே சஞ்சு சாம்சன் பேசியவை, ‘இந்திய கிரிக்கெட்டராக மனதளவில் நாம் நிறைய விஷயங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். குறிப்பாக, டி20 க்களில் அதிகம் ரிஸ்க் எடுத்து ஆடுவதால் ஒரு வீரராக வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் அடைகிறோம். உள்ளூர் போட்டிகளிலும் ஐ.பி.எல் லிலும் நீண்ட காலம் ஆடிய அனுபவம் இருப்பதால் தோல்விகளையும் அதுசார்ந்த அழுத்தங்களையும் என்னால் கடந்துவிட முடிகிறது என நினைக்கிறேன். இந்திய அணியின் நிர்வாகமுமே என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தது. இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன போது அடுத்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

நம்பர் 1 லிருந்து 6 வரைக்கும் எங்கே இறங்கி வேண்டுமானாலும் ஆட நான் தயாராக இருந்தேன். இந்தத் தொடரில் நான் ஓப்பனிங் இறங்கப்போகிறேன் என்பதை மூன்று வாரங்களுக்கு முன்பே சூர்யா என்னிடம் கூறிவிட்டார். அப்போதே ராஜஸ்தான் ராயல்ஸின் அகாடமிக்கு சென்று புதிய பந்தில் அதிகமாக பயிற்சி செய்ய தொடங்கிவிட்டேன். அணி நிர்வாகம் என் மேல் வைத்த அந்த நம்பிக்கைக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

கடந்த இரண்டு போட்டிகளாகவே நல்ல டச்சில்தான் இருந்தேன். ஆனால், பெரிய ஸ்கோர்தான் வரவில்லை. இந்தப் போட்டியில் பவர்ப்ளேயை கடந்து நின்றுவிட்டால் அணியை பெரிய ஸ்கோரை எட்ட வைக்கும் அளவுக்கு ஆடி விட வேண்டும் என நினைத்தேன். சூர்யாவுடனான என்னுடைய பார்ட்னர்ஷிப்புமே சிறப்பாக இருந்தது. அனுபவித்து மகிழ்ந்து ஆடினேன்.

கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே என்னுடைய பயிற்சியாளர்களுடன் இணைந்து ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக்க வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சிகளை செய்து வந்தேன். இன்று 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தது சிறப்பான சம்பவம். இப்படி ஒன்றை நிகழ்த்த வேண்டுமென்று நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தேன்.’ என்றார்.

சாம்சனின் இன்னிங்ஸை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com