சென்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்ரேட்டை அதிகப்படுத்திய ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் படுமோசமான ஆட்டத்தை விளையாடியிருக்கிறது. முக்கியமான ஆட்டத்தைப் பொறுப்புணர்வுடன் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது ஆர்.சி.பி.
டாஸை வென்ற ஆர்.சி.பி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பாப் டூ பிளசிஸ் களமிறங்கினர். பவர்பிளே முடிந்த பிறகு கோலி ஆசிப் பந்தில் அவுட்டாக, அதன் பிறகு இந்த சீசனில் நல்ல பார்மில் விளையாடி வரும் டூ ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி தங்களது வழக்கமான ஆட்டத்தை ஆடினர். பெரிய அளவில் ரன்கள் சேராதபோதும் சீராக ரன்களைச் சேர்த்தது ஆர்.சி.பி. இருவருமே அரை சதம் கடந்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இந்த சீசனில் பெரிய அளவில் சோபிக்காத தினேஷ் கார்த்திக் இந்தமுறையும் டக் அவுட்டானார். இறுதியில் அனுஜ் ராவத் சில நல்ல ஷாட்கள் அடிக்க ஆர்.சி.பி 171 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.
ஹோம் கிரவுண்ட், நல்ல பார்மில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் பெரிய இலக்காக இருக்காது என்று பார்த்தால் ஆட்டம் வேறு மாதிரி சென்றது. இந்த சீசனில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிராஜ் வீசிய முதல் ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியுடன் வெளியேறினார். அதற்கடுத்த ஓவரில் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பட்லர் கவர் திசையில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் ப்ளேயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இரண்டு ஆட்டக்காரர்களும் டக் அவுட்டாகினர். 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில், கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றால், அதே ஓவரில் அவரும் அவுட்டாகி நடையைக் கட்டினார்.