அங்கிருந்து அடுத்த சில ஓவர்கள், மும்பையின் அட்டாக், சற்றே தீவிரமடைந்தது. ரன்களை வாரி வழங்கவில்லை. பட்லர் – மிட்செல்லை ஆதிக்கம் செலுத்தவும் விடவில்லை. மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக மும்பை பந்துவீச 9-15 ஓவர்களில், 35 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானின் ரன்வங்கியில் சேர்ந்தது. குறிப்பாக கார்த்திகேயா அதில் மூன்று ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே தந்திருந்தார். குட் லெந்த்தில் வந்த சாம்ஸின் ஸ்லோ பால் தள்ளாடிக் கொண்டிருந்த மிட்செலை 17 ரன்களோடு வெளியேற்றியது. ஆறு ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 100 ரன்கள் கூட வராதது, மும்பையை சற்றே ஆசுவாசப்படுத்தியது. ஆனால் பட்லரது பேட்டுக்கு எவ்வளவு நேரம் விலங்கிட முடியும்? நாலாபுறமும் சுற்றப்படக் காத்திருந்த பேட்டுக்கு, ஹ்ரித்திக்கின் ஓவரில் வந்து சேர்ந்த முதல் நான்கு பந்துகள் இரையாகின. 46 பந்துகளில், 43 ரன்கள் என வேற்று கிரகத்தில் ஆடிக் கொண்டிருந்த பட்லரது ஸ்ட்ரைக் ரேட்டை முடுக்கிவிட்டன அந்த நான்கு பந்துகள். லாங் ஆனில் தொடங்கி, லாங் ஆஃப் வரை என நான்கு சிக்ஸர்களில், மும்பைக்கு மரணபீதியை பட்லர் புயல் காட்ட, அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது; ஆரஞ்சுக் கேப்பை மறந்தும் கூடக் கழற்றக் கூடாதென்பதில் தீவிரமாக உள்ளார் பட்லர். எனினும் அந்த ஓவரில், ரவுண்ட் த விக்கெட்டில் வீசப்பட்ட ஹ்ரித்திக்கின் இறுதிப்பந்து, பட்லரை வெளியேற்றி புளகாங்கிதமடைந்தது.
இறுதி நான்கு ஓவர்களில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தமேற்றி, 32 ரன்களை மட்டுமே கொடுத்து, 158 ரன்களோடு ராஜஸ்தானின் இன்னிங்ஸை முடித்து வைத்தது மும்பை. அஷ்வினின் கடைசி கட்ட அதிரடி இல்லாமல் போயிருந்தால், ராஜஸ்தான் இன்னமும் குறைவான இலக்கையே நிர்ணயித்திருக்கும். “நாங்கள் ஆடிய பிட்ச்களில், இது மிக ஸ்லோவாக இருக்கிறது”, என ராஜஸ்தானின் துணைப் பயிற்சியாளர், கூறியிருந்தார். 48 பந்துகளில் வந்து சேர்ந்த பட்லரது அரை சதத்தைவிட, இதற்கு வேறென்ன சாட்சியம் வேண்டும்?! எனவே இலக்கை எட்டுவதும், அதுவும் ராஜஸ்தானின் பௌலிங் படை பலத்தை மீறி, அதனை எட்டுவதும், மும்பைக்கும் சவாலாகத்தான் இருக்கப் போகிறது என்பதே ஆரம்பகட்ட அறிகுறியாக இருந்தது.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போன போட்டியில் விட்ட இடத்திலிருந்து, போல்ட் தொடருவாரா, பட்லரைப் போல், மும்பைக்கு எதிராக வஞ்சம் தீர்த்துக் கொள்வாரா என்றெல்லாம் ரசிகர்கள் மனதில் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழ, இஷான் கிஷன், அதிரடியாக போல்டின் ஓப்பனிங் ஓவரை, பவுண்டரி சிக்ஸரோடு வரவேற்றார். அடுத்து வந்த பிரஷித்துக்கும் அதுவே நேர்ந்தது. சரி, வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத்தானே வாளைச் சுழற்றுவார் என, இடக்கை ஆட்டக்காரரான அவரை வீழ்த்த, மூன்றாவது ஓவரிலேயே, அஷ்வினைக் கொண்டு வந்தார், சாம்சன். ஆனால், இஷானுக்கு பதிலாக ரோஹித்தின் விக்கெட்டை அது விழவைத்தது. ஒன்பது போட்டிகளில், 17 ஆவரேஜோடு பதற வைக்கிறது ரோஹித்தின் தற்போதைய ஃபார்ம். இந்த சீசனில், அவர் அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோரே 41 என்பதுதான், வேதனை தரும் உண்மை. நோஹிட் ரோஹித்தாகவே இந்த சீசன் முழுவதும் அவர் வலம் வருகிறார்.