ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், “அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.
சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவுக்கும் கிட்டத்தட்ட முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்றே தோன்ற வைத்துவிட்டது.
இறுதியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்க நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒருமுறை பஞ்சாப் வெற்றி வாகை சூடியுள்ளது. மறுபுறம் ஆர்சிபி தங்களது 3 பெரிய தோல்விகளால் ரன்ரேட்டில் மிகவும் அடிவாங்கி நெகட்டிவ் பாயிண்டுகளுடன் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே, ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது நிர்ணயிக்கப்படும். பஞ்சாப் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றிருந்தாலும் மற்ற 2 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்; அதுபோக, மற்ற அணிகளின் இடங்களைப் பொறுத்தே அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பும் அமையும்.