நாய்க்கடியில் சிம்பிள் நாய்க்கடி. அதாவது, பல் பதிந்திருக்கும். ஆனால், ரத்தம் வராது. இவர்களுக்கு டிடி இன்ஜெக்ஷன் போடுவோம். இதனுடன் இம்யூனோகுளோபுலின் ஊசி(நாய்க்கடிக்கான ஊசி)யும் போடுவோம். இந்த ஊசியை நாய் கடித்தவுடன் ஓர் ஊசி, பிறகு கடித்ததிலிருந்து நான்காவது நாள், எட்டாவது நாள், பதினான்காவது நாள், 28-வது நாள் போடுவோம். கடித்தது வீட்டு நாய், அது தடுப்பூசியெல்லாம் போடப்பட்டு நோய் எதிர்ப்புச்சக்தியுடன் இருக்கிறது என்றால், 3 டோஸ் ஊசிப் போட்டாலே போதும். இதுவே தெரு நாய் என்றால், அது சொறியெல்லாம் இல்லாமல் உடலளவில் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ரேபிஸ் ரிஸ்க்கை தவிர்ப்பதற்காக 5 ஊசிகள் கண்டிப்பாக போடுவோம்.
நாயானது கடித்து, சிறிதளவு தசையையே பிய்த்து எடுத்துவிட்டதென்றால், நான் மேலே குறிப்பிட்டுள்ள ஊசி மட்டும் போதாது. அவர்களுக்கு ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் என்கிற பவர்ஃபுல்லான ஊசி மருந்தை செலுத்துவோம். இந்த ஊசி மருந்து சின்னச்சின்ன கிளினிக்குகளில் இருக்காது. அரசு மருத்துவமனைகளின் நூறு சதவிகிதம் இந்த மருந்து இருப்பில் இருக்கும். தவிர, மருத்துவ வசதிகள் அதிகம் இருக்கிற பெரிய மருத்துவமனைகளிலும் இந்த ஊசி மருந்து இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் இது கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.
தசையே பிய்ந்துபோனவர்களுக்கு உயிர் போகிற அளவுக்கு கடித்த இடத்தில் வலி இருக்கும். அதனால், இவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, கடிபட்ட இடத்தைச்சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்தை உடனடியாக செலுத்துவோம். இந்தளவுக்கு நாய்க்கடி படுபவர்களுக்கு இன்னொரு பயங்கர ஆபத்தும் இருக்கிறது. இவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களிலேயே ரேபிஸ் நோய் முற்றிப்போய்விடலாம் என்பதால், எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு செல்வதை தள்ளிப்போடாதீர்கள். இவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜன் உதவிகூட தேவைப்படலாம்.

நாய்க்கடியிலும் கோல்டன் ஹவர் இருக்கிறது. நாய் கடித்த ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். ‘வீட்டு நாய்தானே’, ‘தெரிந்த நாய்தானே’, ‘தொற்று இல்லாத ஹெல்தியான நாய்தானே’ என்று அலட்சியமாக ஒரு டி.டி ஊசியுடன் நிறுத்திவிட்டார்களென்றால், அடுத்த ஒரு மாதத்துக்குள் கை – கால் விறைப்பு, தாகம் அதிகமாக இருக்கும். ஆனால், தண்ணீரைக்கண்டால் பயம் என்று மெள்ள மெள்ள மாறுவார்கள். நாயின் குணம், மனிதனுடைய உடல் என அவர்களுடைய மனநிலையை விவரிப்பதே கடினம். மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வருவதே பெரும்பாடாக இருக்கும். இந்த நிலையில், அவர்களைக் காப்பாற்றுவதே கடினம். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, கடிபட்டவுடனே மருத்துவமனைக்கு வந்துவிடுவதுதான்.