டிசம்பர் 5… இன்றிலிருந்து 2 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாள்களுக்கு முன்பு… அதாவது டிசம்பர் 17, 2021. “புஷ்பா 1′ வெளியான நாள். ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கு சினிமா உலகளவில் பேசப்பட்டு, கொண்டாடப்பட்டது ‘புஷ்பா’வைத்தான். பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், மாஸ் சீன்கள் எனப் பக்க்க்க்கா கமர்ஷியல் மசாலா என்டர்டெயினராக ‘புஷ்பா’ ஓர் புயலாக மாறி ஆரவாரமாகக் கரையைக் கடந்தது. இன்று மையம் கொண்டுள்ள ‘புஷ்பா 2’வின் தாக்கம் எப்படி இருக்கிறது? கள நிலவரம் என்ன? ஃப்ளவரா, ஃபையரா அல்லது வைல்ட் ஃபயரா ?
முதல் பாகம் முழுக்க தனக்கென அடையாளம் இல்லாதவராக, செஞ்சந்தன மரம் வெட்டி கடத்தல் செய்யும் கும்பலில் கூலியாளாக வேலைக்குச் செல்லும் புஷ்பராஜ், தன்னுடைய சாதுரியத்தாலும் சாமர்த்தியத்தனத்தாலும் செஞ்சந்தன மர கடத்தல் தொழிலின் சிம்மாசனத்தில் ஏறி எப்படி டானாக மாறுகிறார் என்பதைச் சொல்லிருப்பார்கள். மொத்தத்தில் புஷ்பராஜின் எழுச்சியே முதல் பாகம். ஆந்திர அரசியலையே மாற்றும் புஷ்பாவின் அதிகாரத்தின் உச்சம் என்ன, ஐ.பி.எஸ் அதிகாரி பன்வர் சிங் செகாவத்துக்கும் புஷ்பாவுக்குமான பகை என்னவானது, தன் அண்ணன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ஏக்கம் புஷ்பாவை என்ன ஆனது ஆகியவைதான் இரண்டாம் பாகம்.