
பட மூலாதாரம், BCCI/IPL
80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அணியை சரிவில் இருந்து மீட்டு, பஞ்சாப் வசம் இருந்த வெற்றியை பறிக்க முயன்றபோது விக்கெட்டை பறிகொடுத்தார், அட்டகாசமான ஃபார்மில் திகழ்ந்த ரஸல் .
அதிருப்தியில் ரஸல் கோபத்துடன் கத்தியவாறு மைதானத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் கொல்கத்தாவின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தில் மழையும் குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ்.
அதிரடியாக தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையிலான நடப்பு ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார் பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங்.
முதல் ஓவரில் ஒரு சிக்சர், அடுத்த ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகள், 5வது பந்தில் சிக்சர் என எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்த பிரப்சிம்ரன் டிம் சவுதியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து பஞ்சாபின் ரன் குவிப்பை பிரப்சிம்ரன் துவக்கி வைக்க, அடுத்து வந்த பனுகா ராஜபக்ஷ அரைசதம் அடித்து அசத்தினார். டாப் ஆர்டர்களின் ரன் குவிப்பால் பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாபின் பந்துவீச்சில் சறுக்கியது.
கொல்கத்தாவை சோதித்த அந்த ஒரு ஓவர்
பஞ்சாப் அணிக்காக 2வது ஓவரை வீச வந்தார் அர்ஷ்தீப் சிங். ஷார்ட் பாலாக வீசப்பட்ட முதல் பந்தை, தூக்கி அடிக்க முற்பட்டு சாம் கரண் வசம் கேட்ச் கொடுத்து, 2 ரன்களில் ஆட்டமிழந்தார் மந்தீப் சிங்.
முதல் பந்தில் கிடைத்த விக்கெட்டை போன்றே கடைசி பந்தையும் அனுகுல் ராய்க்கு ஷாட்பாலாக வீச, அது தனக்கு எறியப்பட்ட வலை என்பதை அறியாமலேயே 4 ரன்களில் சிக்கந்தர் ராசாவிடம் கேட்ச் கொடுத்து சிக்கினார் அனுகுல் ராய்.
கொல்கத்தாவை அதிரடியாக ஆட விடாமல், துவக்கத்திலேயே சறுக்கச் செய்ததில் அர்ஷ்தீபின் துல்லியமான பந்துவீச்சு பஞ்சாபிற்கு பெரிதும் உதவியது. மறுபுறம், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், 22 ரன்களிலும், நிதிஷ் ரானா 24 ரன்களிலும், ரின்கு சிங் 4 ரன்களிலும் வெளியேறினர்.
மூழ்கிய கப்பலை மீட்டெடுத்த ரஸல் – வெங்கடேஷ்
பட மூலாதாரம், BCCI/IPL
ரஸல்
80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பந்துவீச்சால் அதுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பஞ்சாபை ரஸல் – வெங்கடேஷ் கூட்டணி துணிச்சலுடன் எதிர்கொண்டது.
இருவரும் சேர்ந்து பஞ்சாப் பந்துவீச்சை பிளந்துகட்டினர். இந்த ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி சரிவில் இருந்து மீளத் தொடங்கியது. 14வது ஓவர் கொல்கத்தாவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
2 நோ பால்களால் மொத்தம் 8 பந்துகளை வீசினார் நாதன் எல்லிஸ். ரஸல் – வெங்கடேஷ் கூட்டணி சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டு மொத்தம் 18 ரன்களை சேர்த்தது.
அந்த ஓவரில் ரஸலின் கேட்ச் வாய்ப்பையும் பஞ்சாப் நழுவவிட, அது கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைந்தது. ஆட்டம் விறுவிறுப்புடன் நகர்ந்துகொண்டிருந்தபோது, சாம் கரண் பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரஸல்.
19 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் என மொத்தம் 35 ரன்கள் சேர்த்தது அணியை சரிவில் இருந்து மீட்க பெரிதும் உதவியது. அவரைத் தொடர்ந்து இன்னொரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருந்த வெங்கடேஷின் ஆட்டம் 34 ரன்களில் முடிவுக்கு வந்தது. வெங்கடேஷ் இம்பாக்ட் பிளேயராக வருண் சக்கரவர்த்திக்கு பதில் களமிறங்கியது கவனித்தக்கது.
கொல்கத்தாவின் தோல்விக்கான காரணங்கள்
16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது கொல்கத்தா. அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. விறுவிறுப்பான கட்டத்தில் கொல்கத்தாவின் முக்கிய விக்கெட்களை தக்க சமயத்தில் பஞ்சாப் கைப்பற்றியதன் மூலம் அந்த அணிக்கு வெற்றி சாத்தியமாகியுள்ளது.
கொல்கத்தாவை பொறுத்தவரை, பந்துவீச்சில் அவ்வளவு சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த வீரராக திகழ்ந்தாலும், டிம் செளதி 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பஞ்சாபை சமாளிக்க வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா பயன்படுத்தியிருந்தார். மறுபுறம் பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், சுழற்பந்துவீச்சாளர்களை சாமர்த்தியமாக கையாண்டார். கொல்கத்தாவை சமாளிக்க 7 பந்துவீச்சாளர்கள் வரை அவர் பயன்படுத்தியிருந்தார். கொல்கத்தா அணி, ரஸல் போன்ற வீரர்களுக்கு ஓவர்களை வழங்கியிருக்கலாம்.
சேசிங்போது கொல்கத்தா அடுத்தடுத்து 3 விக்கெட்களை பறிகொடுத்தது அணிக்கு பின்னடைவாக மாறியது. துவக்கத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை கணிசமாக சேர்த்திருந்தால், ரஸல் – வெங்கடேஷின் போராட்ட முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: