பொதுவாகவே டி20போல் சிறுகதையாக முடியாமல் விறுவிறுப்பான தருணங்களும், மௌன யுத்தங்களும், தூண்டிலிட்டுக் காத்திருந்து புலிவேட்டையாடும் சாமர்த்தியங்களும் டெஸ்டினை தொடர்கதையாக அடையாளம் காட்டும். ஏற்றஇறக்கங்களும், அபாய வளைவுகளும்தான் டெஸ்டினை உயிர்த்துடிப்போடு வைத்துள்ளன. அவை அத்தனையையுமே இறுதிநாளில் காணமுடிந்தது. 210 ரன்கள்தானே, 90 ஓவர்களும் 9 விக்கெட்டுகளும் கைவசமுள்ளதே என்ற அலட்சியம் சற்றே ஆட்கொள்ள அவர்களது அஞ்சுவது பேதைமை என்னும் புதுமொழியின் உட்பொருளும் முன்செலுத்தியது. நின்று நிதானமாக ஆடியிருந்தால் தாக்குப்பிடித்திருக்க வேண்டிய களத்தில் 80/5 என்ற ஸ்கோரோடு இங்கிலாந்து திணறியது.
ரன் அவுட்டுகள் டெஸ்டில் பெருங்குற்றம். அதிலும் குறைந்த ஸ்கோரை துரத்துகையில் ஹாரி ப்ரூக் போன்றொரின் விக்கெட்டுகள் விழுவது போட்டியின் போக்கையே மாற்றிவிடும். அதேபோலத்தான் டெஸ்ட்களின் அடிநாதமான வேரூன்றும் பார்ட்னர்ஷிப்களும். 25 ஓவர்களுக்குமேல் நீடித்து 120 ரன்களைத் தாண்டிய ரூட் – ஸ்டோக்ஸ் இணை பதிலடி கொடுத்தது. ஒரு ஸ்பெல் கொல்லும் ஒரு ஸ்பெல் வெல்லும், வாக்னர் போன்றோரின் பவுன்சர்களால் லோட் செய்யப்பட்ட ஸ்பெல்லோ சத்தமேயின்றி பகைமுடிக்கும். செட்டிலாகியிருந்த இந்த இரு பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார் வாக்னர். ஷார்ட் பாலினை புல் செய்ய முயன்று ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், மிடில் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறிய ரூட் என அடுத்தடுத்த இருவிக்கெட்டுகளோடு பிராடும் வெளியேறியது நியூசிலாந்தின் பக்கம் காற்றைத்திருப்பின.
நியூசிலாந்து சலிக்காமல் ஒவ்வொன்றாக முயற்சித்தது. ஃபாஸ்ட் பௌலிங்கில் கீப்பரை முன்பாக நிற்கவைத்ததோடு, ஸ்லிப்கள், Gully, Fly slip என அணைகட்டி பந்தை எட்ஜ் வாங்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. பின் கீப்பரை பின்னால் நகர்த்தியதோடு லெக் சைடை லோட் செய்து ஷார்ட் பால்களை தலையையும் விலாவினையும் பதம் பார்க்க பௌலர்களை ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீசவைத்தது. இங்கிலாந்தோ அட்டாக்கிங் மனநிலையிலிருந்து பின்வாங்கவே இல்லை. கேடயத்தால் தற்காத்துக் கொண்டு டிராவோடு சமரசமாவதைவிட வாளேந்தி வீழ்வதே மேல் என்பது இங்கிலாந்தின் நோக்கமாக இருந்தது. இருபுறமும் மாறிமாறி ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலையில் டெஸ்ட் கிரிக்கெட்தான் சறுகி விளையாடியது.
ஏழு ரன்களா ஒரு விக்கெட்டா என்ற இறுதிச்சுற்றில் பணயம் வைக்கப்பட்ட ஆண்டர்சன் வாக்னர் பந்தில் அடித்த அந்த பவுண்டரியின் மீதுகூட Bazzball-ன் சாயம்தான் பூசப்பட்டிருந்தது. சற்றே பிசகியிருந்தாலும் அங்கேயே போட்டி முடிவுற்றிருக்கும், அதற்கெல்லாம் கலங்காத மனப்பாங்குதான் புதிய இங்கிலாந்துக்குரியது. சற்றே வொய்டாக வீசப்பட்ட இறுதிப்பந்துக்கு முந்தைய பந்து வொய்டாகியிருந்தால் போட்டி டையாக்கும் வாய்ப்புக்கூட இருந்தது. அது தப்பிப்போயினும் Bazzball-ம் ஷார்ட் பால்களும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சத்திற்கு ஏற்றின. காலத்திற்கும் பேசப்படப் போகும் ஒன்றாகவும் இதனை மாற்றின.