2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு ஒரு நாட்டின் செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1967 இல் பிறந்த டேரன் அசெமோக்லு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ், யுகேவில் இருந்து 1992ம் ஆண்டு PhD முடித்தவர். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர்.
1963-ல் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சைமன் ஜான்சன், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1989ம் ஆண்டு PhD முடித்தவர். தற்போது தான் படித்த அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
1960ல் பிறந்த ஜேம்ஸ் ஏ. ராபின்சன், 1993-ல் அமெரிக்காவின் நியூ ஹெவன்-ல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் இருக்கிறார்.